மத்திய வங்கியிலிருந்து பெற்ற டொலரால் ஏற்பட்ட மாற்றம்! வாகன இறக்குமதி குறித்து திட்டவட்டமாக அறிவிப்பு
இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்குவது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய திட்டவட்டமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (16.06.2023) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
டொலர் பெறுமதியில் ஏற்பட்ட தாக்கம்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அவர் கூறுகையில், இந்த நாட்களில் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ஒரே நேரத்தில் கனிம எண்ணெய்யை வாங்குவதற்கு சுமார் 75 முதல் 80 மில்லியன் டொலர்கள் தேவைப்பட்டன.
எனவே அதனை மத்திய வங்கியிலிருந்து பெற்றதையடுத்து டொலரின் பெறுமதி சிறியளவில் உயரும் போக்கு இருந்தது.
அத்துடன் டொலரில் முதலீடு செய்யும் சிலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் டொலர்களை வாங்க ஆரம்பித்தனர்.
இவை இரண்டின் விளைவுதான் டொலரின் மதிப்பு 320 ரூபாயை எட்டியமை. இந்த நிலையில் மீண்டும் 306 ரூபாவிற்கு வந்ததையும் பார்த்தோம். இது ஒரு அசாதாரண நிலை அல்ல. தேவை மற்றும் விநியோகத்தால் இயக்கப்படும் ஒரு சாதாரண சூழ்நிலை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி
இதன்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுமா என வினவப்பட்டதையடுத்து அதற்கு அவர் பதிலளிக்கையில், தேவைப்படும் எண்ணெய்க்காக 75 முதல் 80 மில்லியன் டொலர்கள் செலவானாலும் நமது டொலரின் மதிப்பை பாதிக்கிறது.
இந்த நிலையில் சுருக்கமாகச் சொன்னால், வாகன இறக்குமதியை அனுமதிக்க இது பொருத்தமான தருணம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |