பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை எமது சிங்கள தேசம் உணர வேண்டும்: சிறீதரன் கருத்து(Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் தாக்கம்
மேலும் தெரிவிக்கையில், “அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
“கோட்டா கோ கம” போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை இப்போது தான் சிங்கள தேசம் உணரத் தொடங்கியிருக்கிறது. இந்த கொடூரமான சட்டம் மூலம் தமிழர்கள் 30 வருடங்களுக்கு மேலாக துன்புறுத்தப்படுகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம்
இந்த தடைச் சட்டத்தால் வருடக்கணக்கில் எமது சுற்றத்தார் விசாரணை இன்றி சிறையில் இருக்கிறார்கள். இப்போது இலங்கையின் அமைச்சர்கள் வடக்கை நோக்க புறப்படுகிறார்கள் காரணம் செப்டம்பர் மாதத்தில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாக இருக்கின்றது.
இந்த கூட்டத்தொடரை சமாளிப்பதற்கு தாம் வடக்கிற்கும் வந்து அபிவிருத்தி வேலைகளை செய்கிறோம் என காட்ட இலங்கை அரசு முயல்கிறது. இலங்கை அரசின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.
இந்த நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்திற்கு போயிருக்கிறது எதிர்வரும் மாதங்களில் நிலை இன்னும் மோசமடையலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
சிறீதரனின் கோரிக்கைகள்
இந்த நிலையை ரணில் விக்ரமசிங்க மாற்றவேண்டும் என்றால் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயலவேண்டும்.
விவசாயத்திற்கு தேவையான எரிபொருளையும் வழங்கினாலே எமது மக்கள் தமக்குத் தேவையான உணவினைப் பெற்றுக் கொள்வதோடு இந்த நாட்டிற்கே வழங்குவார்கள் எரிபொருள் இன்மை காரணமாக கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள்.
பஞ்சத்தை போக்க ரணில் விக்ரமசிங்க விரும்பினால் எரிபொருள் மற்றும் உரத்தையும் வழங்கவேண்டும். மக்களிடம் நாம் வினயமாக கேட்கிறோம் நீங்களும் சுயமாக வீடுகளில் வீட்டுத் தோட்டம் செய்யுங்கள் எமது சுய பொருளாதாரத்தை நாமும் கட்டியெழுப்ப வேண்டும்.
பட்டினியால் உயிர் போகாத நிலையை நாம் உருவாக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தையின் தலைவர் மற்றும் செயலாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
