இலங்கைக்கு பத்து ஆண்டுகள் கடன் சலுகைக்காலம் வழங்க வேண்டும்! பாரிஸ் கிளப் பிரேரணை
இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியில் மீண்டுவருவதற்கு பத்து ஆண்டுகள் வரையிலான கடன் சலுகைக்காலம் ஒன்று வழங்கப்பட வேண்டுமென்று பாரிஸ் கிளப் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு இணையாக பாரிஸ் கிளப் அங்கத்துவ நாடுகளும் கரிசனை கொண்டுள்ளன.
பாரிஸ் கிளப் பிரேரணை
அதன் ஒருகட்டமாக இலங்கைக்கு பத்துவருடங்கள் வரை எந்தவித கடனையும் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத சலுகைக் காலம் ஒன்று வழங்கப்பட வேண்டுமென்று பாரிஸ் கிளப் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.
அத்துடன் அதன்பின்னர் சுமார் பதினைந்து ஆண்டுகள் வரையான கடன் மறுசீரமைப்புக்காலம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்றும் பாரிஸ் கிளப் பரிந்துரைத்துள்ளது.
அதன் மூலம் இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் குறிப்பிடத்தக்க இழப்பை சந்திக்க நேர்ந்தாலும் நீண்ட கால இலக்கின் அடிப்படையில் இலங்கை பொருளாதார ரீதியாக மீளத்தலைதூக்க முடியும். என்று பாரிஸ் கிளப் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா
எனினும் இந்த யோசனைகளை இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான தரப்புகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் பாரிஸ் உத்தியோகபூர்வமாக இதுவரை முன்வைக்கவில்லை என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அதற்கிடையே சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் இதுவரை முன்னெடுக்கப்படாத காரணத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவுடன் டிசம்பரில் ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கப்பட்ட இணக்கப்பாடு தற்போது பின்தள்ளப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள கடன் தொகை காலம் தாழ்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.