உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது – இலங்கைக்கு எந்த இடம்..!
உலகளாவிய பயணச் சுதந்திரத்தை அளவிடும் தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடவுச்சீட்டுகளின் வலிமை மற்றும் விசா அணுகல் தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் சுயாதீன தளமான பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடவுச்சீட்டு
இலங்கை கடவுச்சீட்டின் Mobility Score 53 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 15 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். மேலும், 34 நாடுகளுக்கு சென்றடைந்த பின்னர் விசா பெற முடியும்.
அதேவேளை, 4 நாடுகளுக்கு மின்னணு பயண அனுமதி (ETA) மூலம் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 145 நாடுகளுக்குச் செல்ல முன்கூட்டியே விசா பெறுவது அவசியம் என பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 131ஆவது இடத்திலும், சீனா 97ஆவது இடத்திலும், ரஷ்யா 75ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 183ஆவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
விசா இல்லாத பயணம்
இலங்கைக்கு அருகிலுள்ள தரவரிசையில் மியான்மர் 168ஆவது இடத்திலும், நேபாளம் 171ஆவது இடத்திலும், எத்தியோப்பியா 173ஆவது இடத்திலும் உள்ளன. உலகளவில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலிடத்தில் உள்ளது.

சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், மலேசியா நான்காவது இடத்திலும், லக்சம்பேர்க் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் 6ஆவது இடத்திலும், நோர்வே 7ஆவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
Passport Reports தளத்தின் விளக்கத்தின்படி, கடவுச்சீட்டின் வலிமையை ஒரு தரவரிசை எண்ணால் மட்டும் மதிப்பிடாமல், விசா இல்லாத பயணம், சென்றடைந்த பின்னர் விசா பெறும் வசதி, மின்னணு பயண அனுமதி மற்றும் முன்கூட்டியே விசா தேவைப்படும் நாடுகள் என தனித்தனியாக தகவல்களை வழங்குகிறது.