வேகமாக அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கியின் செயற்பாடு தொடர்பில் அமைச்சர் பந்துலவின் விளக்கம்
ரூபாவின் பெறுமதி, கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதற்குக் காரணம் வெளிநாட்டு அந்நிய செலாவணி அதிகமாக நாட்டுக்கு கிடைத்து வருகின்றமையே என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி குறைந்து செல்வதை தடுப்பதற்காக மூன்று வருட காலத்தில் ஐந்து பில்லியன் டொலர்கள் விடுவிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ரூபாவின் பெறுமதி அதிகரித்தமைக்கு காரணம் டொலர்கள் விற்பனை செய்தமை அன்றி நாட்டுக்கு அதிகளவு வெளிநாட்டு அந்நிய செலாவணி கிடைத்துள்ளமையே இதற்கு காரணம்.
ரூபாவின் அதிகரிப்பிற்கு காரணம்
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தமை, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர் நாட்டுக்கு அதிகளவு டொலர்களை அனுப்பியமை, டொலர்களை வைத்திருந்தோர் அதனை விரைவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தமை மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொடர்பில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை உள்ளிட்ட பல காரணங்கள் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது.
ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையாமல் முன்னெடுத்துச் செல்வதற்காக மத்திய வங்கி, கடந்த 2012, 2015, 2016 மற்றும் 2018 ஆம் வருடங்களில் பாரிய தலையீடுகளை மேற்கொண்டது.
அந்த வகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக மத்திய வங்கி அவ்வப்போது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது.
2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அந்நிய செலாவணி விற்பனை அளவு (சந்தைக்கு விடுவிக்கப்பட்ட அளவு) 3,253 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் 2016 ஆம் ஆண்டு அது 768 மில்லியன் டொலராகவும் அதேவேளை 2018 ஆம் ஆண்டு அது 1,120 மில்லியன் டொலராகவும் காணப்பட்டுள்ளது.
அந்த மூன்று வருடங்களில் ஐந்து பில்லியன் டொலருக்கு மேல் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.