சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...
சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை, முதலீட்டாளர் உறவுகள் (Investor Relations) மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இத்துறையில் மிக அதிக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
IIF இன் அறிக்கை
IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” அறிக்கையின்படி, உலகின் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் 57 இல் இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் புள்ளி எண்ணிக்கை 2025 இல் 37.33 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2026 இல் 43.67 வரை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
இத்துறையில் 6.3 புள்ளிகள் என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக "வேகமாக முன்னேறும் நாடுகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.

கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) தரவுகள் மற்றும் கொள்கைகளை முறையாகப் பரப்புரை செய்தமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடன் வெளிப்படைத்தன்மை
2025 இல் 19 ஆம் இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஆண்டில் பின்பற்றிய முறைசார்ந்த கடன் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக 2026 இல் 5 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்கள் இணைந்து முதலீட்டாளர்களுடன் பேணிய முறைசார்ந்த உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் தகவல்களை வழங்கியமை பெரிதும் உதவியுள்ளது.
இலங்கை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் நாட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் எதிர்காலத்தில் இது பெரும் பக்கபலமாக அமையும்.