ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..!
பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது இலங்கை தீவின் ஜனநாயக அரசியலில் இடதுசாரிகள் ஆட்சி அமைப்பதையோ அதிகாரத்துக்கு வருவதையோ மேற்குலகம் விரும்பவில்லை.
அன்றைய காலத்தில் இடதுசாரிகள் வலதுசாரிகளுக்கு சவாலாக இருந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பின்னாளில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வலது காரியத்துக்குள் கரைக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனால் அதன் பின்னர் ஜேவிபி எனப்படும் ஆயுதப் போராட்ட இடதுசாரிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இரண்டு முறை கிளர்ச்சி செய்து இறுதியில் 1989ல் ஆயுத வழி கிளர்ச்சியில் தோல்வியடைந்தனர்.
ஊழல் ஒழிப்பு
34 வருட நீண்ட காத்திருப்பதற்குப் பின்னர் தேர்தல் ஜனநாயக வழியில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை 2024ல் கைப்பற்றினார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற "ஊழல் ஒழிப்பு" என்பதே அவர்கள் தூக்கிப் பிடித்த கோஷமாகும்.
அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருட பூர்த்தி ஆகின்றபோது "ஊழல் ஒழிப்பு" என்ற தமது கோசத்தை மீண்டும் வலியுறுத்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட ஏதாவது செய்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் அனுதா அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்தது.
இந்தப் பின்னணிகள் தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வழக்கு தாக்கல் செய்து கைதுசெய்தனர்.
இதன் மூலம் ஊழல் ஒழிப்பு என்ற கோசத்தை ஊளையிடுதல் ஆக்கிவிட்டார்கள். இலங்கை தீவில் வடக்கிலும் தெற்கிலும் நடாத்தப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் இலங்கை அரசியலில் ஊழல் பெருச்சாளிகளையும் அதிகார துஷ்பிரயோக எதேச்திகாரிகளையும் தோற்றுவித்திருந்தது.
பொதுவாக யுத்தம் எங்கு நடக்கிறதோ அங்கு ஊழலும் அதிகார துஷ்பிரயோகங்களும், மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் சாதாரணமாகிவிடும்.
அவ்வாறான ஒரு யுத்த சூழல் நீண்ட காலமாக ஒரு தேசத்தில் நிலவுமானால் அந்த யுத்த சூழலுக்குள் இத்தகைய மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், அதிகாரத்து பிரயோகங்கள், ஊழல்கள் யாவும் சாதாரணமானதாகவும் சகஜமானதாகவும் பழக்கப்பட்ட விடும்.
அத்தகைய ஒரு அரசியல் சமூகவியல் சூழலே இலங்கை தீவில் கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இத்தகைய ஒரு சூழலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும், அதற்கு எதிராக தமிழ் மக்கள் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை எந்த அசுர க்கரம் கொண்டு அடக்கினார்களோ அந்தக் கரங்கள் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் பதிந்த போது சிங்கள தேசத்தில் அரகலைய என்ற மக்கள் கிளர்ச்சி தோற்றம் பெற்றது.
இந்த மக்கள் வளர்ச்சியை பின்னிருந்து இயக்கியதும் மேற்குலகமே.
அரகலய போராட்டம்
இலங்கை அரசியலை மேற்குலகின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது அதன் மேலாதிக்கத்தின்கீழ் தொடர்ந்து வைத்திருப்பதே மேற்குலகத்தின் இந்து சமுத்திர பிராந்திய அரசியல் கொள்கை.
அந்தக் கொள்கைக்கு எதிராக ஆட்சியாளர்கள் செயற்பட்ட சூழலிலேயே அரகலய போராட்டம் தோற்றுவிக்கப்பட்டது.
அந்த அறகலைய தோற்றத்தின் விளைவு போராட்டக்காரர்களிடம் அதிகாரத்தை கையளிக்கவில்லை.
மாறாக அது இன்னும் ஒரு சிங்கள மேற்தட்டு வர்க்கத்திலிருந்து வந்த ரணில் விக்ரமசிங்கவிடமே சென்றதை நாம் கண்டோம்.
தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற வந்து இலங்கை ஜனாதிபதி நாற்காலியில் ரணிலால் எப்படி அமர முடிந்தது? இந்த அரசியல் சித்துக்களின் பின்புலங்கள் என்ன? என்பதை சரிவர எடை போட வேண்டும்.
எஞ்சிய கால ஜனாதிபதி பதவியை ரணில் வகுத்திருந்தாலும் இலங்கைத் தீவின் பொருளாதாரம் படுமோசமாக விழுந்து வாங்குரோத்து என்ற நிலையில் எட்டியபோது ஜனாதிபதி பதவியை ஏற்று ஒரு மாத காலத்துக்குள் நிலைமையை வழமைக்கு திருப்பிய ராஜதந்திரியவர்.
அவ்வாறு ஒரு மாதத்துக்குள் இலங்கையை வழமைக்கு திருப்பும் அளவிற்கு சர்வதேச ரீதியாக அவருக்கு ராஜதந்திர தலைமைத்துவ பெருமானம் சர்வதேச தலைவர்களின் நம்பிக்கையும் அபிமானத்தையும் பெற்றவர் என்பதை நாம் மறுத்து விட முடியாது.
சிங்கள மன்னர்கள் பரம்பரையோடும், படைத்தளபதிகள் பரம்பரையோடும் தொடர்பு பட்ட பெரும் செல்வந்த குடும்பத்திலிருந்து ஜனநாயக அரசியலுக்கு வந்த அவர் 1977ம் ஆண்டிலிருந்து இலங்கை அரசியலில் பயணித்து 12 தடவைகள் நெருக்கடி காலகட்டங்களில் பிரதமர் பதவியை வகித்து இலங்கையை வழிநடத்திச் சென்ற முதிர்ந்த ராஜதந்திரி.
நவீன இலங்கை வரலாற்றில் ஜே ஆர் ஜெயவர்த்தனாவிற்கு பின்னர் அவருக்கு நிகரான ராஜதந்திரி ரணில் விக்ரமசிங்க என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஏறத்தாழ 47 ஆண்டுகள் இலங்கை அரசியலில் சிங்கள தேசத்தினதும் சிங்கள பௌத்த அரசியல் நலனுக்காகவும் அவர் தனது அரசியல் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.
தமிழ் மக்கள்
அவருடைய இந்த நீண்ட உள்நாட்டு அரசியல் வாழ்விலும், சர்வதேச அரசியலிலும் அவர் செல்வாக்கு செலுத்தி இருக்கிறார்.
இலங்கைத் தீவின் அமைவிடம் காரணமாக இந்து சமுத்திர அரசியலில் இலங்கைத் தீவுக்கு இருக்கின்ற வகிபாகத்தையும், பெறுமானத்தையும் சிங்கள தேசத்துக்கு சாதகமாக வளைப்பதில் அவர் பல தடவைகள் வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் பெரும் ராஜதந்திர சித்து விளையாட்டுகளை ஆடிய ராஜதந்திரி.
விருப்பு வெறுப்புக்கு அப்பால் தமிழர்களின் போராட்டத்தை தோற்கடிப்பதில் அவர் சிங்கள தேசத்திற்கு கணிசமான பங்கையும் பாத்திரத்தையும் வகித்திருக்கிறார். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய பங்குதாரராகவும் அவர் இருக்கிறார். அதே நேரத்தில் சிங்கள இடதுசாரிகளை ஒடுக்குவதிலும் அவர் சளைத்தவர் அல்ல.
அரசியலில் அரச இயந்திரத்திற்கு ரத்தம் பச்சைப் பட வேண்டும் அவ்வாறு ரத்தம் பச்சை பட்டால் மாத்திரமே அரச இயந்திரத்தின் சக்கரம் சுழலும் என்கிறார் மாக்கியவலி. ஆகவே ரணில் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. இத்தகைய ரணில் விக்ரமசிங்க எப்போதும் மேற்குலகச் சார்பானவர்.
அவ்வாறு இருந்து கொண்டு அவர் மறுபுறத்தே இந்தியாவையும் எதிர்ப்புறத்தே சீனாவையும் ஒரே தட்டில் வைத்து கையாளும் திறன் படைத்தவர். குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் அதனை துலாம்பரமாக காண முடியும்.
இன்று கொழும்பின் நகரப்பகுதியில் இருக்கின்ற அரசுக்கு சொந்தமான திணைக்களங்கள், லாகாக்களின் கட்டடத் தொகுதிகள், மற்றும் காணிகள் அவருடைய பரம்பரையினர் அரசுக்கு தானமாக வழங்கியவைதான். வாரிசு அற்ற அவர் தனக்கப்பின் தான் வாழும் வீட்டினை தான் கற்ற பாடசாலைக்கு தானமாக உயில்எழுதி வைத்திருக்கிறார்.
அதுமாத்திரமல்ல அவருடைய மனைவிகூட தனது பேராசிரியர் சம்பளத்தின் முழு பகுதியையும் பல்கலைக்கழகத்தின் வறிய மாணவர்களுக்கான நிதியத்துக்கு வழங்கி வருகிறார்கள் என்பதிலிருந்து அவருடைய வாழ்வியலையும் அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயங்கள் சிங்கள சமூகத்தில் அவருக்கு ஒரு நற்பெயரை, நம்பகத்தன்மையை, சமூகப் பெருமானத்தை உயர்வாகவே வைத்துள்ளது.
சிங்கள மக்கள் மத்தியில் ரணில் ஊழல் செய்தார் அல்லது நிதி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு வலுவற்றது நம்பகத்தன்மை அற்றது என்பதே சிங்கள மக்களின் நிலைப்பாடாகும்.
இப்போது அவர் மீது ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த ஊழல் என்பது ரணில் விக்ரமசிங்க தனக்காக எதையும் செய்திருக்க வாய்ப்பில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
ஆயினும் அவர் கூட இருக்கும் பரிவாரங்களும் அதிகாரிகளும் இந்த ஊழல்களை மேற்கொண்டு இருக்கிறார்கள், அல்லது அந்த அதிகார துஷ்பிரயோகங்களை, நிதி மோசடிகளை செய்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களுடைய அந்த குற்றங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர் ரணில் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
பட்டலந்தை வதை முகாம்
அதே நேரத்தில் ரணிலை கைது செய்வதற்கு வலுவான பல காரணங்கள் இருக்கின்றன. பட்டலந்தை வதை முகாம் தொடர்பான குற்றச்சாட்டு, மற்றும் பணமுறி தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றன.
அதே நேரத்தில் தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கமான 1981ல் யாழ் நூலக எரிப்பு, மற்றும் 1983 ஜூலை படுகொலை போன்ற குற்றங்கள் இவர் மீது உண்டு.
ஆயினும் இந்தக் குற்றங்கள் சார்ந்து எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் அநுர அரசு எடுக்கவில்லை அவற்றை எடுப்பதற்கான வாய்ப்புகளும் இல்லவே இல்லை. ஆயினும் பட்டலந்தை வதைமுகாமில் வதைக்கப்பட்ட சிதைக்கப்பட்ட தங்களுடைய தோழர் தோழிகளுக்காக ஒரு பழிவாங்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு எழுந்திருந்தது.
அதே நேரத்தில் ஊழலைப்பு என்பதை மீண்டும் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்துவதற்கும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் கடந்த வருடம் அவர் லண்டன் சென்று அங்கு 16.9 மில்லியன் ரூபாய்களை சட்டத்துக்கு முரணாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார் இவ்வாறு ஒரு மலிவான கைது இன்றைய ஆட்சியாளருக்கு தேவைதானா என்ற கேள்வி அரசியல் விமர்சங்களுக்கும் அரசரவியலாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது இது சாதாரண மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
ரணில் கைது செய்யப்பட்டு சிறைக் கூட்டத்துக்கு செல்வார் என்று ஜேவிபி அணியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ரணிலின் உள்நாட்டு பரிமாணமும் சர்வதேச பரிமாணமும் பற்றி சரிவர எடை போடப்படாமல் ரணில் மீது இவர்கள் கை வைத்து விட்டனர். ரணிலை பாதுகாப்பதற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இந்த அளவிற்கு கரங்கள் நீலமென்று அநுர அரசாங்கம் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் நிகழ்ந்துவிட்டது. ரணில் சிறைச்சாலைக்கு செல்லாமல் வைத்தியசாலையில் இருந்தபடியே பிணை பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார் என்பதிலிருந்து அவர் எத்தகைய ராஜதந்திரி என்பதை இனியாவது அநுர அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரணிலை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கையின் சமாதான தூதுவராக செயல்பட்ட எரிக் சொல்கேம் விடுத்த வேண்டுகோளானது ஒரு தனிமனிதன் பிடத்த வேண்டுகோளாக பலரும் கருதக்கூடும். எரிக் சொல்கேம் என்ற மனிதர் ஒரு நேர்வேநாட்டு தனி மனிதர் அல்ல.
அவர் சர்வதேச ராஜதந்திரி. சர்வதேச விவகாரங்களில் எந்த நாடுகளிலும் செயற்படக்கூடிய வல்லமை வாய்ந்தவர். ஆகவே அவருடைய கூற்றிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த நாட்டினுடைய இறைமை ஆயினும் சரி, நீதித்துறை ஆயினும் சரி உலகின் வல்லமை வாய்ந்த நாடுகளினதும், சர்வதேச அழுத்தங்களினதும், தலையீடுகளினதும் பிடிக்குள்ளே இருக்கின்றன, அவற்றின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாடுகளை நாடுகளால் கையாள்வதற்கு பெயர்தான் சர்வதேச உறவுகள்.
சர்வதேசம் என்ற ஒரு வெறும் வார்த்தை சர்வதேச அரசியல் ஆகிவிடாது. சர்வதேசமாக காணப்படும் உலக நாடுகள் அனைத்தையும் தமது தேவை கேட்டவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரம்கட்டி, எந்த நாட்டு கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி தத்தமக்கான வெற்றியை ஈட்டுவதுதான் சர்வதேச உறவுகள் ஆகும்.
ரணிலின் கைது
சர்வதேசம் என்பது ஒரு புனிதப் பதம் கிடையாது. அது நாடுகளை அணிகளாக வகுத்து தத்தமது தேவைக்கு ஏற்றவாறு கையாளுகின்ற வித்தைகளால் சர்வதேச உறவுகள் என்ற பரிமாணத்தை அடைய முடிகிறது.
சர்வதேச உறவில் நல்லதும் கெட்டதும் கொண்ட, சூதும் வாதம் மிக்க தீட்டும் துடக்கும் உள்ள எதிரும் புதிருமான, நட்பும் பகையும் நொதுமலும் கொண்ட, சூதும் வாதும் மிக்க, புகழ்ச்சியும் இகழ்ச்சியும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பொறாமையும், ஏற்றத்தாழ்வும், ஆதிக்க அகங்காரமும் மிக்க ஒரு வினோதமான கலவையை கொண்ட பன்னாடுகளும் தத்தம் நலன்களை அடைவதற்காக முட்டி மோதி தமக்கான பங்கை பறித்துக்கொள்கின்ற அரசியல் ஆடுகளமே சர்வதேச உறவுகள் ஆகும்.
அந்த ஆடுகளத்தில் இலங்கைக்காக, சிங்கள அரசுக்காக சாகச வித்தைகாட்டி வெற்றி வாகை சூடியவர் ரணில். அத்தகையவருக்கு என்றொரு சர்வதேச பெருமானம் உண்டு என்பது இப்போது அவர் கைதின் பின்னே அநுர அரசாங்கத்திற்கு புரிந்திருக்கும்.
ரணில் கைது செய்ததன் மூலம் மூஞ்சுறு எலியைப் கௌவிய பாம்பு குட்டியாக அநுர அணி திண்டாடுகிறது.
ரணிலின் கைது பிணை விடுதலை ஊடாக எதிர்காலத்தில் சிங்கள அரசியலின் பெரும் புள்ளிகளில் கைவைக்க முடியாத இக்கட்டான ஒரு நிலை இலங்கை அரசியல் தோன்றியிருக்கிறது. எப்படியெனில் ரணிலின் கைதியின் பின்னே சிங்கள அரசியலில் எதிர்க்கட்சிகளும் மேற்தட்டு அரசியல் அணியும் ஒன்றிணைந்து விட்டனர்.
எந்த அரகலயப் போராட்டத்தின் விளைவும் அதன் விளைவும் அநுரவை தூக்கு நிறுத்தியதோ அதே மக்கள் அலை அநுரவையும் ஆட்டம் காண வைக்கும் சூழல் தென்னிலங்கையில் தோன்றி வருகிறது ஆகவே இனி சிங்களத்தின் பெருந்தலைவர் மீது கை வைக்க முடியாத துர்பாக்கிய நிலையை அனுவ அரசாங்கம் அடைந்து விட்டது என்பதுதான் உண்மை.
இன்று நாம் வாழும் உலகம் வெறும் ஒரு நாட்டினுடைய அதிகாரத்துக்கு மாத்திரமல்ல சர்வதேச அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு நாம் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்வதில் இருந்துதான் இலங்கை தீவின் அரசியலையும் தமிழ் மக்களுடைய அரசியலையும் நாம் புரிந்து கொள்ளவும் செயற்படவும் எதிர்காலக் கொள்கைத் திட்டங்களை வகுக்கவும் முடியும்.
இதுவே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thiva அவரால் எழுதப்பட்டு, 31 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 6 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
