போராட்டக்காரர்களுக்கு புதிய பிரதமர் தினேஷ் வழங்கும் அறிவுரை
தற்போதுள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஆசி பெறுவதற்காக நாரஹேன்பிட்டி அபயராம விகாரைக்கு வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் தகவல்
எவ்வாறாயினும், காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நேற்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலானது நாட்டின் ஜனநாயகத்தின் மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் குலைக்கக்கூடும் என ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, அதற்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.