காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் நள்ளிரவில் நடந்தது என்ன..! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
போராட்டம் நடத்த வேண்டுமாயின் அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
அச்சுறுத்தல், அழுத்தம் பிரயோகித்தல், வன்முறையை கட்டவிழ்த்து விடுதல் அல்லது கலவரம் செய்தல் போன்றவற்றின் மூலம் பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பல தடவைகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தும், அவர்கள் பதிலளிக்கவில்லை, வேறு மாற்று நடவடிக்கை இல்லாததால், கூட்டு நடவடிக்கையின் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டனர்.
ஆதாரத்தை வெளியிட்ட பொலிஸ்
இந்த அறிக்கைக்கு மேலதிகமாக பொலிஸார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், காலி முகத்திடலுக்கு சென்ற பொலிஸாரை ஆர்ப்பாட்டக்காரர்கள் துரத்தியடிப்பதும், அது தங்கள் இடமென்று கூறுவதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.