தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி
சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஆயினும் இந்த மோதல்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(7) நடைபெற்ற அமர்வின்போது, சிறைச்சாலைகளில் தொடரும் மோதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலனாய்வுத் தகவல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல்கள் தற்போது மஹர, வெலிக்கடை மகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளுக்கும் கட்டம் கட்டமாக விரிவடைந்துள்ளது.

கிடைக்கப் பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அறிக்கைகளின்படி, இவை யாவும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்பதுடன், சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சதியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன. வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் 40 பேர் ஒன்றிணைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடுமையான நடவடிக்கைகள்
எனினும், இச்சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் மோதல்களைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்லன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவுக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைச்சாலைகளில் தொடரும் இத்தகைய அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்தவும், கட்டமைப்பைப் பாதுகாக்கவுமான கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.