மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் பாரிய மண்சரிவு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் – கல்கந்த தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக அங்கு வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் மஸ்கெலியா காட்மோர் பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்து
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேற்பகுதியில் அமைந்துள்ள காட்மோர் தேயிலைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் பாரியளவில் மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தோட்டத்தின் தொடர் குடியிருப்புகளில் வசித்து வந்த குடும்பங்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர்இ காட்மோர் – கல்கந்த பிரிவில் அமைந்துள்ள பாதுகாப்பான கட்டடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மண்சரிவு காரணமாக தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியும் மண் மற்றும் கற்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தோட்டத்திற்குச் செல்வதற்கு மாற்று வீதி வசதியும் இல்லாத காரணத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதி
ஆபத்து நிலவும் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்இ மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்து மேலதிக ஆபத்துகள் குறித்து கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கிராம சேவகர் மற்றும் தோட்ட நிர்வாகத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து கடும் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட்டுஇ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.