பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்: பந்துல குணவர்தன
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்டது. ஆனால் இச் சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகங்களில் 43 வருடங்களாக உள்ளது.
இச் சட்டத்தினை நீக்க வேண்டும் என பலரும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த18 ஆம் திகதி கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணதிலக்க உட்பட 19 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் 16 பேரை பிணையில் விடுக்கப்பட்டனர்.
வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணதிலக்க ஆகிய மூவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக தற்போது சர்வதேச நாடுகளும் பல்வேறு கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையிலே அமைச்சரின் இவ் அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.