ரணிலால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி தேர்தல் களத்தில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணிலால் பதவி நீக்கப்பட்ட ரொஷான்
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைகின்றது.
இவ்வாறான நிலையிலேயே முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தானும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறுகல் நிலை காரணமாக ரொஷான் ரணசிங்க விளையாட்டுத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வருடம் பதவி விலக்கப்பட்டார்.
அதன் பின்னரான நாட்களில் அரசியல் மேடைகளில் ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க காட்டமாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |