மகிந்தவை குறி வைக்கும் அரசாங்கம்! ஜனாதிபதிக்கு பகிரங்கமாக விடுக்கப்பட்டுள்ள சவால்
விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பழிவாங்குகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அநுதாரபுரத்தில் நேற்று(2) கிராமத்துக்கு கிராமம் மக்கள் சந்திப்பை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
அவர் மேலும் தெரிவித்ததாவது,''முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள்.
ஆனால் இதுவரையில் மகிந்த ராஜபக்சவை அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமான கடிதத்தை அனுப்பவில்லை. முடிந்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பை எழுத்துமூலமாக விடுக்க வேண்டும் என்ற சவாலை அரசாங்கத்திடம் முன்வைக்கிறேன்.
விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசாங்கம் பழிவாங்குகிறது. ஏனைய ஜனாதிபதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஒப்பிட முடியாது.
தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணித்தியாலங்களில் அனைத்தையும் மாற்றியமைப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் இன்று கடந்த அரசாங்கங்கள் மீது விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறது.
பொருளாதார நிலை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து வேறு எந்த திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை.
கடந்த காலங்களில் விமர்சித்த பொருளாதார மற்றும் அரச கொள்கையை எவ்வித மாற்றமுமில்லாமல் ஜனாதிபதி முன்னெடுக்கிறார்.
சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளன.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.மாறாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைத்து அரச இல்லங்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என கூறியுள்ளார்.