ஒரே திகதியில் வீழ்த்தப்பட்ட மகிந்தவும் பசிலும்! திருப்புமுனையாகும் இலங்கையின் அரசியல்..
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜபக்ச தரப்புக்கு அடுத்தடுத்து பேரடியாக மாறிக் கொண்டிருக்கிறது இலங்கையின் அரசியல் களம்.
இலங்கை அரசியலில் ராஜபக்ச தரப்பிற்கு என்று பெரு மதிப்பும், கௌரவமும் இருந்தது. இலங்கையின் தேசிய பாதுகாப்பை அவர்கள் மட்டுமே உறுதி செய்வார்கள் என்கிற தோற்றப்பாடும், நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது. இதனை ராஜபக்ச கம்பனி மிக நேர்த்தியாக சாதாரண சிங்கள மக்களிடையே கட்டமைத்து, அதனை தற்காத்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் இருந்து அவர்கள் இந்த நாட்டை இரண்டாவது தடவையாக சுதந்திரமடையச் செய்த மீட்பர்களாக கொண்டாடியிருந்தனர் சிங்கள பௌத்த மக்கள். அதன் வழி, அவர்களும், பௌத்தம், சிங்கள தேசியவாதம் என்பனவற்றை மிகவும் கச்சிதமாகவே கட்டமைத்திருந்தனர். எனினும், 2015ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்தும் தலைகீழாக மாறியது.
மகிந்த ராஜபக்சவின் யுத்த வெற்றியைக் கொண்டு தேர்தலில் வெற்றி வாகை சூட முடியவில்லை. அதற்கு மிகப்பெரும் காரணமாக அமைந்தது, தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரி ரணில் தரப்பிற்கு கிடைத்தமை என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இதனை மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றதன் பின்னர், சொந்த ஊர் திரும்பியதும் இலங்கை சிறுபான்மை மக்களால் தோற்கடிக்கப்பட்டேன் என்றும் உரக்கச் சொல்லியிருந்தார்.
எனினும், தேர்தலில் தோற்றாலும் தமது மீள் வருகைக்காக அவர்கள் கடுமையாக உழைத்தனர். பௌத்த சிங்கள மக்களை கிராமம் கிராமமாக தேடிச் சென்றனர். பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்டு அரசியல் களத்தை கட்டமைக்கத் தொடங்கினர். இவை யாவற்றுக்கும், மேலாக மைத்திரி ரணில் அரசியல் மோதலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் அவர்களுக்கு கை கொடுக்க, சிங்கள மக்களிடையே மீண்டும் ராஜபக்ச தரப்பினர் தான் நாட்டை காக்க முடியும் என்று நம்பினர்.
தேர்தல் வியூகங்களிலும் வெற்றி வாகை சூடினர். புதிய கட்சி, ஆனால் பழைய அரசியல் சித்தாந்தங்களை கொண்டு காய்களை நகர்த்தினர். அவர்களின் நகர்த்தல்கள் யாவும் தொட்டதெல்லாம் வெற்றியாக குவித்தது. புதிய கட்சியை சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டனர். தேர்தலில் வெற்றியை கொடுத்தனர்.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர் மகிந்தவை பிரதமராக்கினர். இலங்கை இனி மீண்டு விடும், தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று நம்பினர். எனினும், அரசியல் கொள்கைகள் கடுமையான தீர்மானங்கள், உட்கட்சி சிக்கல்கள், வெளிநாட்டு கொள்கைகளில் ஏற்பட்ட சறுக்கல்கள், விடாப்பிடி, இனி ராஜபக்ச தரப்பை அசைக்க முடியாது என்கிற நம்பிக்கை என்பன அவர்களை மீண்டும் சரிவில் தள்ளியது.
குறிப்பாக, பொருளாதார கொள்கையை சரியாமல் வகுக்காமலும், சரியான முடிவுகளை எடுக்காமலும், அசண்டையீனமாக இருந்ததன் விளைவை ராஜபக்ச தரப்பினர் வெகு விரைவிலேயே அறுவடை செய்யத் தொடங்கினர்.
ஒட்டுமொத்த நாடுமே திவாலாகி வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை வந்த போதே சிங்கள மக்கள் லேசாக விழித்துக் கொண்டனர். அமைதி வழியிலான போராட்டங்களை ஆரம்பிக்கத் தொடங்கினர். தங்களின் எதிர்ப்பை காட்டத் தொடங்கினர். ஆனாலும் ராஜபக்ச தரப்பினர் மீதான நம்பிக்கை சாதாரண சிங்கள மக்களிடையே இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இருப்பினும் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைய தென்னிலங்கையில் பொது மக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எவரை மீட்பராக கருதினரோ அவரே தங்களை படுகுழியில் தள்ளுகின்றனர் என்பதை உணரத் தொடங்கினர்.
மறுபுறுத்திலோ, நாடு திவாலாகி அனைத்தும் கை மீறிய நிலையிலும் சரியான முடிவுகளை எடுக்காமல், அதிகாரத்தை தக்க வைக்கப் பாடுபட்டனர். இருபது ஆண்டுகளுக்கு மேல் ராஜபக்ச தரப்பை அசைக்கவே முடியாது என்கிற நம்பிக்கை இரண்டே ஆண்டுகளில் தகர்த்து எறியப்பட்டது.
கோட்டாபய ராஜபக்சவை தேசியத்தின் காப்பர் என்று நினைத்த மக்களை வீட்டுக்குப் போ என்று கத்தும் அளவிற்கு நிலைமை மோசமடைந்து. அந்தப் போராட்டம் மாற்று வடிவம் பெற்று மகிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விரட்டும் வரை சென்றது. எனினும் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்றார் மகிந்த. ஆனாலும் தென்னிலங்கை மக்களின் போராட்டம் உச்சம் தொட, பதவி விலக முன்னர் அமைதி வழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
அமைதி வழிப் போராட்டத்தின் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதல்கள் அதன் பின்னர், ஏற்பட்ட கலவரங்கள் இலங்கையை சிதைத்தது. இலங்கை சிங்கள பௌத்த மக்களின் மீட்பரான மகிந்த ராஜபக்சவையே பதுங்கியிருக்கும் அளவுக்கு இலங்கையின் அரசியல் நிலவரம் மாறியது. தமிழர் பகுதியில் சென்று பதுங்கினார் மகிந்த. மே மாதம் 9ஆம் திகதி தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து இறங்கினார். ஆனாலும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்றும் அறிவித்தார்.
ரணில் பிரதமரானால் ஓரளவுக்கு சிக்கல் நிலை தீரும் என்றனர். ஆனாலும், நாட்கள் மட்டுமே நகர்கின்றன. எந்த முன்னேற்றமும் இல்லை என்று மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் ரணிலுக்கு முட்டுக்கட்டை போடும் அளவிற்கு பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
21ஆம் அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டால் தனது நாடாளுமன்ற பதவிக்கு ஆப்பு என்பதை உணர்ந்து கொண்ட பசில் அதனை தடுக்க முயன்றார். எனினும், அந்த முடிவில் ரணில் விக்ரமசிங்க விடாப்பிடியாக இருந்தார். ஒருகட்டத்தில் ரணிலை நேரடியாக சந்தித்து பேசிய போதும் ரணில் காட்டமாக பதிலளித்தாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் அதாவது, ஜூன் ஒன்பதாம் திகதி தனது பதவியை துறப்பதாக அறிவித்திருக்கிறார். அதாவது கடந்த மே மாதம் 9ஆம் திகதி அண்ணன் மகிந்த பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதேபோன்று, ஜூன் ஒன்பதாம் திகதி பசில் ராஜபக்ச நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வீழ்ச்சி என்பது யாரும் எதிர்பார்த்த ஒன்று அல்ல. ஆனால், இலங்கையில் அவர்கள் வீழ்த்தப்படுவது நிதர்சனத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் என்பதை எவரும் கணிக்கவும் இல்லை. நினைக்கவும் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் சாமானிய மக்களின் வயிற்றில் அடிவிழும் பொழுது மன்னர்களை மகுடங்களை வெகுஜன எழுச்சி பார்க்காது என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
இதுவொருபுறமிக்க, ராஜபக்ச தரப்பில் முக்கியமான காய்கள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. மகிந்த பதவியில் இல்லை. பசில் ராஜபக்ச பதவியில் இல்லை. இப்போது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச மட்டுமே இருக்கிறார். ராஜபக்ச என்கிற பெரும் குடும்பத்தின் ஆட்சியதிகாரங்கள் இலங்கையில் மெல்லமெல்ல நசுக்கப்பட்டு இப்போது குறுகி நிற்கிறது.
ரணில் என்னும் இராஜதந்திர அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும், வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை ரணில் எப்படி கையாளப் போகிறார் என்பதே இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி......?