காரொன்றை அதிரடியாக மடக்கிப் பிடித்த பொலிஸார்.. நடுவீதியில் பரபரப்புச் சம்பவம்
குளியாப்பிட்டிய அருகே பன்னலை நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கார் வண்டியொன்றை மடக்கிப்பிடித்துள்ளனர்.
குருநாகல் - கொழும்பு வீதியின் கிரியுல்ல பிரதேசத்தில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை, நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்துள்ளனர்.
எனினும் குறித்த கார் நிற்காமல் தொடர்ந்தும் கிரியுல்ல - நீர்கொழும்பு வீதியில் அதிவேகத்தில் பயணிக்கத் தொடங்கியதை அடுத்து, கிரியுல்லை பொலிஸாரின் ஜீப் வண்டியொன்றும் குறித்த காரை விரட்டிச் சென்றுள்ளது.
பொலிஸார் துப்பாக்கிச் சூடு..
இதன்போது பன்னலை நகர் மத்தியில் பாதையில் பயணித்த லொறி மற்றும் டிப்பர் ரக இரண்டு வாகனங்களின் உதவியுடன் தப்பிச் சென்ற காரின் வழிப்பாதை மறிக்கப்பட்டு, பொலிஸார் காரைச் சுற்றி வளைத்துள்ளனர்.

அதன் பின்னர் காரின் ஒரு பக்க முன் மற்றும் பின்சக்கரங்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி கார் நகர முடியாமல் முடக்கப்பட்டதன் பின்னர், முன்பக்க இடதுபுற விண்ட்ஸ்க்றீன் கண்ணாடி உடைக்கப்பட்டு கார் கதவு திறக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, காரின் சாரதி ஆசனத்தில் இருந்த ஒரு ஆண் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த காரில் போதைப் பொருள் கடத்தல் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.