முன்னாள் பிரதி அமைச்சர் சாமர சம்பத்தின் தனிப்பட்ட செயலாளர் கைது
முன்னாள் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
'லங்கா பாஸ்பேட்' (Lanka Phosphate) நிறுவனம் ஊடாக பொசுபேற்று ஏற்றுமதியை மேற்கொள்வதற்கு, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக மூன்று நிறுவனங்களை மாத்திரம் தெரிவு செய்தது தொடர்பான விவகாரத்தில், 8.1 மில்லியன் ரூபா இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8.1 மில்லியன் இலஞ்சம்
அதிகாரிகள் நேற்று (21) மாலை சுமார் 4:55 மணியளவில் இவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் மூன்று நிறுவனங்களை மாத்திரம் பொசுபேற்று ஏற்றுமதிக்குத் தெரிவு செய்த பின்னர், அந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவியாக அவர்களிடம் இந்தத் தொகையைக் கோரிப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.