ஆசனப்பட்டி இல்லாமல் நடுவில் அமர்ந்து செல்வோருக்கு எச்சரிக்கை - திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்
ஆசனப்பட்டி பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசனப்பட்டிகளுக்கு ஏற்ப பயணிகள்
அத்துடன் பின்புற இருக்கையில் இரண்டு ஆசனப்பட்டிகள் மட்டுமே இருந்தால், அங்கு இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசனப்பட்டி இல்லாமல் மூன்றாவது பயணி நடுவில் அமர்ந்து பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.

வாகனங்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை
இதேவேளை ஆசனப்பட்டி அணியாமல் அதிவேக வீதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி வசதி இல்லாத நிலையில் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்பில் நீதிமன்ற வளாகம்! இன்று வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு