நாடாளுமன்றத்தில் இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதம் ஆரம்பம்
புதிய இணைப்பு
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 33 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து விவாதம் ஆரம்பமானது.
இரண்டாம் இணைப்பு
எதிர்க்கட்சிகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இலங்கையில் செயல்படும் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் பரவலாக குற்றம் சுமத்தியுள்ளன.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (23.01.2024) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம்
இந்நிலையில் இன்று (23) சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நடைபெறவுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாளை முதல் சமூக ஊடக நிறுவனங்கள் இலங்கை அரச நிறுவனங்களுடனான அனைத்து தகவல் தொடர்பு மற்றும் கூட்டுத் தொடர்புகளையும் துண்டிக்க வாய்ப்புள்ளது என பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |