இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராடுவோம்
இலங்கை தீவின் அரசியல் அதிகாரம் வலதுசாரி ஆட்சியாளிடமிருந்து முதற்கடவையாக இடதுசாரிகளின் கைக்குச் சென்று இருக்கிறது.
ஆயினும் இந்த ஆட்சி முறையானது இலங்கையின் முதலாளித்துவ அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாகவே தொடர்ந்தும் இருப்பதற்கான சூழ்நிலை இருப்பதனால் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இருக்கின்ற ஓட்டைகளையும் நலம் அற்ற பகுதிகளையும் சரிவர கையாண்டு தமிழர் தரப்பு அந்த அரசியலுக்கு ஊடான யாப்பின் மீது ஜனநாயக வடிவிலான ஊடறுப்பு தாக்குதல்களை நடத்தி தமிழர் தேசத்தின் இருப்பை தக்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
இதுவே இன்றைய இலங்கையின் அரசியல் சூறாவளிக்கு தமிழ் மக்கள் அடிபட்டுப் போகாமல் தங்களைக் தற்காத்துக் கொள்வதற்கான உபாயமாகவும் அமைய முடியும்.
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அதிகார சக்தி மாற்றத்தை சடுதியாக ஏற்படுத்திவிட்டது. இந்த சடுதியான மாற்றம் தற்செயலாகவோ உடனடியாகவோ நிகழ்ந்ததல்ல.
செல்லரித்த அதிகார வர்க்கத்தின் கையறு நிலை
யுத்தத்திற்கு பின்னான இலங்கை அரசியலின் செல்லரித்த அதிகார வர்க்கத்தின் கையறு நிலையாகவும் இலங்கை இனபிரச்சினையைச் சரிவர கையாளப்படாமையின் விளைவாகவும் தீவு ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்றது.
அந்த பொருளாதார நெருக்கடிக்கான உடனடி விளைவாக அரகலய போராட்டம் எழுந்து தலைமைத்துவ மாற்றத்தை செய்ததாலும் அது வர்க்கரீதியில் போராட்டத்திற்கு எந்த நல்விளைவையும் கொடுக்கவில்லை என்பதாலும் போராட்டத்தின் பின்னான விளைவுகள் ஏற்படுத்திய பின்விளைவுகளின் விளைவு சிங்கள தேசத்தில் தீவிர இனவாத இடதுசாரிகளின் பக்கம் செல்வதற்கான பெருவாய்ப்பை ஏற்படுத்தியது .
அந்த அடிப்படையில் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும் முடிந்தது.
இந்த நிலையில் விடுதலைக்காக போராடுகின்ற தமிழ் தேசிய இனம் தென் இலங்கையின் அரசியல் மாற்றத்தை சரிவர எடைபோட்டு அந்த அரசியல் மாற்றத்திற்கு நிகராகவும் அதே நேரத்தில் தற்கால சூழலுக்கு பொருத்தமானதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற புதிய சிந்தனைப் போக்கிற்கு மேலும் வலுசேர்க்கக் கூடிய வகையில் முதல் தடவையாக ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவு பொது வேட்பாளருக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
மிகக் குறுகியகாலத் தயாரிப்பில் 2,26,000 செல்லுபடியான வாக்குக்களும் கூடவே 60,000. செல்லுபடியற்ற வாக்குக்களுமென 2,85,000 மேற்பட்ட மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் ஒரு புதிய திசை நோக்கி பயணிப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.
புதிய தேர்தல் வியூகம்
இந்த புதிய பயணத்தை தொடர்ந்து பின்பற்றி எதிர் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் பொதுச்சபையும், தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து புதிய தேர்தல் வியூகம் ஒன்றை வகுக்க வேண்டும்.
அந்த தேர்தல் வியூகமானது தமிழ் மக்களை முற்றிலும் அறிவுபூர்வமாகவும், அரசறிவியல் முதிர்ச்சி உள்ளதாகவும், சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தக் கூடியதாகவும், தமிழர்கள் ஒரு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட கூடிய வகையிலும் அமைய வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்களின் முக்கியத்துக்காகவும், தமிழ் மக்களின் ஐக்கியத்திற்காகவும், அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவிற்காகவும், தமிழ் வாக்குகளை ஒன்று திரட்டுவதற்காகவும், தமிழ் தேசிய கட்டுமானங்களை கட்டுவதற்குமான ஒரு பரீட்சாத்த களமாகவே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கொள்ளப்பட்டது .
அந்த அடிப்படையில் இப்போது இந்த பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவதற்கான ஒரு போராட்ட வியூகமாக இதனைப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது தமிழ் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், போராடுவதற்காகவுமே அன்றி அவர்கள் தமது வங்கிக் கணக்குகளையும் சொத்துக்களை பெருக்குவதற்கோ, வீடு வாசல்களை கோட்டை கொத்தளங்களாக கட்டுவதற்கும் மணல் குவாரிகள், கற்குவாரிகள், மதுபான சாலை அனுமதிகள் பெறுவதற்காகவோ அல்ல.
இவ்வாறு கடந்த காலத்தில் நடந்து கொண்டவர்களை புறந்தள்ளி தமிழ் மக்களுக்கு போராடுகின்ற, போராடக் கூடிய வல்லமையுள்ள, போராட்ட குணமுள்ள தமிழ் தேசியவாதிகளை மாத்திரமே இந்தத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
முதிர் நிலையில் உள்ள அரசியல்வாதிகள்
இவர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குகின்ற நாடாளுமன்ற ஆசனம் என்பது இவர்கள் தமிழ் மக்களுக்காக போராடுவதற்காக வழங்கப்படுகின்ற அடையாள அட்டையே தவிர சலுகைகளை பெறுவதற்கும் சுகபோகங்களை அனுபவிப்பதற்குமான சீதனம் அல்ல.
இந்தத் தேர்தலில் வயது முதிர் நிலையில் உள்ள அரசியல்வாதிகளை புறந்தள்ளி முற்றிலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இளைஞர்களை தேர்தலில் முன்னிறுத்த வேண்டும்.
அவ்வாறு முன்னிறுத்துகின்ற போது 50 வீத வேட்பாளர்கள் பெண்களாக அமைய வேண்டும் என்பது ஒரு புரட்சிகரமான சிந்தனையாக, நிபந்தனையாக அமைவது அவசியம்.
இவ்வாறு அமைவது தமிழ் மக்கள் முற்றிலும் புரட்சிகரமான பாதைக்கும், வளர்ச்சிக்கும் செல்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுவதாக அமையும்.
தெற்காசிய சமூகத்தில் பெண்களின் தொகை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை காணமுடிகிறது. நேபாளத்தில் 52 வீதமான பெண்கள் உள்ளார்கள்.
இலங்கை தீவில் 51 வீதமான பெண்கள் உள்ளார்கள். ஆனாலும் இந்த நாடுகளில் அரசியலிலும் உயர் பதவிகளிலும் பெண்களின் விகிதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பெண்கள் ஐம்பது வீதப் பங்கை வகிக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் பெண்கள் ஐம்பது வீதமாக இருக்க வேண்டும் இதனையே இந்து தத்துவவியலில் அர்த்தநாதீஸ்வரர் வடிவம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்குலகின் மறுமலர்ச்சி காலத்தில் வரையப்பட்ட மொனாலிசா ஓவியம் ஆணையும் பெண்ணையும் பிரதிபலிக்கிறது. அதனால்தான் அந்த ஓவியம் உலகம் புகழ்வாய்ந்த ஓவியமாக பேசப்படுகிறது.
பெண்ணுக்குமான சமத்துவம்
இலங்கைத் தீவில் போராட்டம், புரட்சி, சமஉடமை, சம வாய்ப்பு. சம உரிமை என மேடைகளில் முழங்கிய யாரும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமத்துவத்தை ஒருபோதும் நடைமுறையில் செய்து காட்டவில்லை.
ஆனால் இதனை இப்போது கவனத்தில் கொண்டு பெண்களை முன்னிலைப்படுத்துவதற்கான முன்னுதாரணமாக தமிழர் அரசியல் தரப்பு தமது வளர்ச்சிக்கான பாதையில் பெண்களுக்கு ஐம்பது விகிதத்தை ஒதுக்க வேண்டும்.
இதனை நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலிலும் பெண்களை ஐம்பது வீதத்தினராக நிறுத்தினால் தமிழ் சமூகத்தின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது நிச்சயம்.
சிங்கள தேசம் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. அது உலக வரலாற்றுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது.
உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா அலங்கரித்தார். அவ்வாறே அவர் புதல்வி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தார்.
இப்போது புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியயாவை அமர்த்தி இருக்கிறார்கள். இத்தகைய சிங்கள தேசத்தின் முன்னுதாரணங்களில் இருந்து தமிழர்கள் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
வேகமான அரசியல் நகர்வு
இப்போது ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 என அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய இனம் இந்தப் பொதுத் தேர்தலை மிக கவனமாக கையாள வேண்டும். ஏற்கனவே தமிழ் சிவில் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டு தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பான பொதுக் கட்டமைப்பு இந்தத் தேர்தலை இதய சுத்தியுடனும் முன்னுதாரணத்துடனும் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்க கூடிய வேகமான அரசியல் நகர்வு ஒன்றை உடனடியாகவும் வேகமாகவும் விவேகமாகவும் இப்போது செய்தாக வேண்டும்.
முதலில் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கட்டமைப்போடு இணையாத தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளை மீண்டும் ஒருமுறை இணைப்பதற்கான பலமான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறு தமிழ் தேசிய மக்களின் ஒன்று திரள்வாய் ஒன்றிணைவை அவர்கள் விரும்பவில்லையாயின் அவர்களை ஒத்தோடிகளின் பட்டியலில் சேர்த்துவிட்டு தமிழ் தேசிய ஒருமைப்பாட்டை முன்னெடுக்கவல்ல செயல் திட்டத்தை தொடர வேண்டும்.
எதிர்காலத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கான சில முன் நிபந்தனைகள் வரையப்பட வேண்டும். அத்தகைய நிபந்தனைகள்தான் எதிர்கால தமிழ அரசியலை வழிநடத்த உறுதுணையாக அமையும்
1) தேர்தலில் 50 விதமான பெண்களை வேட்பாளராக நிறுத்துவது இன்றியமையாதது.
2) கடந்த காலங்களில் இரண்டு தடவை நாடாளுமன்றம் சென்றவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும். பல தடவை நாடாளுமன்றம் சென்று எதனையும் சாதிக்காதவர்களால் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியாது.
கடந்த காலத்தில் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் இருப்பவர்கள் நாடாளுமன்ற சுகபோகங்களையும் அதனால் பெறக்கூடிய நலன்களை மட்டுமே சிந்திக்க கூடிய இயல்பான சுயநல சிந்தனைக்கு சென்றிருப்பர் ஆகவே அவ்வாறான இருப்பவர்களை தவிர்ப்பது இன்றைய காலத்துக்கு பொருத்தமானது.
3) அதேபோன்று இரண்டு தடவைகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை மீண்டும் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாது.
தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகள்
மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்களை போட்டியாளராக நிறுத்துவது அரசியல் அறிவியலுக்கும், ஜனநாயகத்திற்கும், தர்மத்துக்கும் முரணானது
4) நாடாளுமன்றம் செல்வது தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு மட்டுமேயன்றி எந்த தனிப்பட்ட சுயநலங்களுக்காகவோ சொத்து சேர்ப்பதற்காகவோ அல்ல. இதை ஏற்றுக்கொண்டு உறுதியளிப்பவர்களை மாத்திரமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரோடத்தின் பின்னரும் தமிழ் மக்கள் தம்முடைய தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடுவார்கள். இந்த சந்தர்ப்பத்திலும் தமது தேசிய அபிலாசைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு நாடாளுமன்ற ஆசனத்தை பயன்படுத்தி போராடிட நாங்கள் உரிமைக்காக போராடும் மக்கள் கூட்டம் என்பதை வெளிகாட்ட வேண்டும்.
போரின் பேரழிவை சந்தித்த போதிலும் சர்வதேச ஆதரவு, அண்டை நாட்டு ஆதரவு இன்றி தோல்வி அடைந்த ஒரு மக்கள் கூட்டமாக நாம் ஒதுங்கிக் கிடக்காமல் தமிழ் மக்களின் இலட்சியத்தை ஏந்தியவாறு நாங்கள் போராடும் மக்கள் கூட்டம் என்ற நினைப்பை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும்.
"உனக்குரிய அரசியலை நீ பேசாமல் விட்டால் உன்னால் வெறுக்கப்படும் அரசியலே உன்னை ஆட்சி புரியும்"" என்கிறார் லெனின்.
இந்தக் கூற்று தமிழ் தேசிய அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமானதும், நடைமுறை சார்ந்ததும், தமிழ் தேசிய இனத்திற்கு இன்று உடனடி தேவையானதும்கூட.
6) நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள் ஒன்றோ அல்லது இரண்டு வருடங்கள் மாத்திரம்தான் அந்தப் பதவியை வகிக்க வேண்டும் அதன் பின் இராஜினாமா செய்து புதிய ஒருவரை நியமிக்க உடன்பட்டவர் ஆக இருக்க வேண்டும். இடைத் தேர்தல் அற்ற இன்றைய அரசியல் யாப்பின் பட்டியல் முறையில் அதற்கு இடமுண்டு.
மேற்குறிப்பிட்ட இந்த நிபந்தனைகள் பார்ப்பதற்கு மிகக் கடினமானதாகவும் சாத்தியமற்றதாகவும் தோன்றக்கூடும்.
ஆனாலும் தமிழ் மக்கள் போராடும் இனம் என்ற அடிப்படையில் போராடுவதற்கு ஏனையவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், அதே நேரத்தில் புதிய பல தலைவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் இது தரும்.
தேர்தல் விதிமுறைகளில் உள்ள பட்டியல் முறை
நாடாளுமன்ற விவரங்களை கையாளுவதற்கான களமாகவும், பயிற்சிக்கான தளமாகவும் இது அமையும். இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பலரும் எண்ணக்கூடும். இது முற்றிலும் சாத்தியமானது.
அது எப்படி எனில் இலங்கையின் அரசியலமைப்பில் நாடாளுமன்ற ஆசனம் என்பது பட்டியல் முறைக்கு உட்பட்டது அந்தப் பட்டியல் முறையில் கட்சியினது அல்லது ஒரு சின்னத்தினது வேட்பாளர்கள் தொடர் வரிசை கிராமத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பார்கள் அவ்வாறு பட்டியலப்பட்டவர்களில் முதலில் இருப்பவர் பதவி இழக்கின்ற போது அந்தப் பதவிக்கான இடம் அந்தப் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த இலங்கை அரசியல் யாப்பின் தேர்தல் விதிமுறைகளில் உள்ள பட்டியல் முறையின் மீது தமிழ் மக்கள் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் செய்ய முடியும்.
இதன் மூலம் தமிழ் மக்களிடையே ஆளுமை மிக்க பல தலைமைகளை உருவாக்க முடியும். பலருக்கு வாய்ப்புகளை அளிக்க முடியும்.
அரசியல் செயல்பாடுகளில் பெண்களையும் இளையவர்களையும் நாட்டம் கொள்ளச் செய்ய முடியும். தமிழ் சமூகத்தின் அரசறிவியலையும், அரசியல் செயற்பாட்டையும் விரிவுபடுத்தி முன்நகர்த்த முடியும்.
இந்த அடிப்படையில் தமிழ் பொது கட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் ஒரு 15 ஆசனங்களை வெல்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் முதல் ஒரு வருடத்திற்கு 15 பேர் நாடாளுமன்றம் செல்வார்கள். அடுத்த வருடம் மேலும் 15 என சுழற்சிமுறை நீடிக்கும்.
தமிழர் அரசியல் நடவடிக்கை
நாடாளுமன்றத்துக்குள் சென்று கர்ச்சித்து ஆங்கிலம், தமிழ் , சிங்களம் என மும்மொழிகளில் வீர தீர பேச்சுக்களைப் பேசி பேச்சுப் போட்டிகளை நடத்தவோ, விவாதங்களை நடத்தவோ வேண்டியதில்லை.
நாடாளுமன்றத்துக்குள் வாயை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு சென்றுவிட்டு நாடாளுமன்றம் முடிந்ததும் வெளியே வந்து தாம் எதைப் பேச வேண்டுமோ அதை ஊடகங்களில் பேச வேண்டும். அது உலகம் தழுவிய ஊடகப் பரப்பில் பேசு பொருளாக மாறும். நாடாளுமன்றத்தில் பேசியதை விட வெளியே பேசியது பெரும் காத்திரமான தாக்கத்தை விளைவிக்கும்.
கடந்த காலங்களில் மணிக்கணக்காகப் பேச்சுப் போட்டி நடாத்தி என்ன பலன் கண்டீர்கள். பேசாமல் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டுவதன் மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு போர்களம் திறக்கலாம்.
இந்த விவகாரம் அதாவது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது நாடாளுமன்ற பதிவேட்டில் பதியப்படாமல் இருக்கும் என்பது உண்மைதான்.
ஆனாலும் அந்தப் பதிவேட்டில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பேசாது கறுப்புத் துணியால் தனது வாயைக் கட்டிக் கொண்டிருந்தார் என்ற குறிப்பு எழுதப்பட்டு இருக்கும். அது தமிழர் அரசியல் நடவடிக்கைக்கு போதுமானது.
கடந்த 76 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் 14 மணித்தியாலங்கள் பேசிய ஜி ஜி பொன்னம்பலத்தால் எதனையும் சாதிக்க முடியவில்லை இப்போது 14 நிமிடங்கள் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பேசும் சுமந்திரனாலும் சாதிக்க முடியவில்லை. அந்த 14 நிமிடங்கள் பேரன் பொன்னம்பலத்தினாலும் எதனையும் சாதிக்க முடியவில்லை.
யாருக்கும் தெரியாமல் மரணித்துப்போன சம்பந்தராலும் எதனையும் சாதிக்க முடியவில்லை. இறுதியாக சாணக்கியனாலும், சுமந்திரனாலும் பேசி எதனையும் சாதிக்க முடியவில்லை.
தமிழர் அரச அறிவியல் அறிவை தாழ்த்தி இழிவுபடுத்துவதாகவே அமைந்திருந்தது. இனியும் எந்தக் கொம்பனும் சிங்கள நாடாளுமன்றம் போய் பேசி எதனையும் சாதிக்க முடியாது என்பதே உண்மை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
ஆகவே நாடாளுமன்றத்துக்குள் பேசுவதை விடுத்து வெளியே பேசுவதன் மூலம் ஒரு புரட்சியை, ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ண முடியும். சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தை சிக்கலுக்குள்ளும், நிர்பந்தத்துக்குள்ளும் தள்ளமுடியும்.
அதனூடாக சர்வதேச கவனத்தை பெறவும் முடியும். போராடும் மக்கள் கூட்டத்துக்கு இது ஒரு முன்னுதாரணமாகவும் அமையும்.
அதே நேரம் இவ்வாறு பட்டியல் முறையில் அனுப்பப்படுகின்ற போது ஒரு முறைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய பெற்றோரை தாய்மாரையும் மனைவிமார்களை அனுப்பி அந்த ஒரு வருடம் முழுவதும் அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்று பேசாமல் தங்கள் பிள்ளைகளை தேடி ஒப்பாரி வைத்து நியாயம் கேட்கும் ஒரு அரங்கத்தை நாடாளுமன்றத்துக்குள் அரங்கேற்றினால் இலங்கை நாடாளுமன்றம் அல்லோல கல்லோலப்படும்.
உலகளாவிய ஜனநாயகத்தின் முன் கேலிக்கூத்து மன்றம் ஆகும். இது சிங்கள தேசத்தில் இன்னும் ஒரு நெருக்கடியை தோற்றுவிக்கும் எதிரிக்கு நெருக்கடி கொடுப்பதுதான் நமது இலக்கை அடைவதற்கான பாதையை திறந்துவிடும்.
இலங்கை அரசியல் யாப்பில் பல ஓட்டைகள் உண்டு அதில் கட்சி தாவாத் தடைச் சட்டம் என்ற ஒரு முன்னேற்றகரமான சரத்து உண்டு.
ஆனாலும் இவ்வாறு வரையறுக்கப்பட்ட சரத்தை உடைக்க கூடிய வகையில் ஆளும் கட்சியினால் செயல்படுத்துவதற்கான ஒரு உபவிதி என்ற ஒரு ஓட்டை அங்கே உள்ளது.
கட்சி தாவல் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது கட்சி தாவியவரை நாடாளுமன்றம் வகை செய்ய முடியும் என்ற விதியை பயன்படுத்தி மட்டக்களப்பு ராஜதுரை கட்சி தாவிய போது நாடாளுமன்றம் அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான நாடாளுமன்றத்துக்குள்ளான வாக்கெடுப்பை நடத்தி ஆளும் கட்சியின் பெரும்பான்மை வாக்குகளால் அவரைத் தொடர்ந்து ஜே. ஆர் ஜெயவர்த்தனா தனது ஆளும் கட்சிக்குள் பேணியது ஒரு நல்ல உதாரணம்.
இது எதிர்காலத்திலும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதையும் கருத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் சூறாவளி
இவ்வாறுதான் இன்றைய ஒரு நெருக்கடி காலகட்டத்திற்குள் இலங்கையின் அரசியல் புதிய நோக்கை புதிய திசை நோக்கி பயணிக்கும் இந்த தருணத்தில் தமிழ் மக்களும் தமக்குரிய பாதையை புதிய திசையிலும் புதிய வழிமுறைகளையும் கையாண்டு தம்மை பாதுகாப்பதற்கான மூலபாயத்தை வகுக்க வேண்டும்.
இந்து சமுத்திர பிராந்திய அரசியல் சூறாவளி இப்போது இலங்கை தீவில் வீச தொடங்கிவிட்டது.
தமிழ் மக்கள் உள்ளும் புறமும் போராட வேண்டிய காலம் இது. இலங்கை தீவுக்குள் வலதுசாரிச் சக்திகளும் இடதுசாரிச் சக்திகளும் மோதிக் கொள்ளும் களமாக அமைந்துவிட்டது.
இவர்கள் மோதிக் கொள்ளும் இந்த களத்துக்குள் தமிழ் மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும்.
இரண்டு யானைகள் தம்மமிடையே மோதிக்கொண்டால் புல்லுக்குதான் செய்தோம் அவ்வாறே இரண்டு யானைகள் தமக்கு இடையே கூடிக் குலவினாலும் புல்லுக்குதான் செய்தோம்.
இங்கே யானையின் வடிவில் சிங்கள அதிகாரவர்க்கமும் புல்லின் வடிவில் தமிழ் தேசிய இனமும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இந்து சமுத்திரச் சூறாவளிக்குள் அகப்பட்டு அழிந்து போவார்களா? அமிழ்ந்து போவார்களா? அல்லது தேர்தல் என்ற ஒரு சிறிய துடுப்பு கட்டையை பிடித்து சரியான திசையில் பயணித்து கரை சேருவார்களா? என்பதை காலம் மட்டும் தீர்மானிப்பது அல்ல . இன்று தமிழ் மக்கள் பொதுச்சபையும் அதனை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.
அதனை தமிழ் சிவில் சமூகம் முன்னுணர்வோடும் விருப்பு வெறுப்புகளை தாண்டி எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்வதுதான் தமிழினத்திற்கு செய்கின்ற பங்களிப்பாக அமையும்.
அதனை சிவில் சமூகம் இன்றைய காலச் சூழ்நிலையில் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 September, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.