சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி - புதிய வரி நடைமுறை
ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகளிடமிருந்து நிதி அல்லாத நலன்களுக்காக அறிவிடப்பட வேண்டிய வரி முறையை உரிய முறையில் ஈட்டிக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிதியல்லாத நலன்கள் என்ற பட்டியலில் வாகனம், வீடு, ஊழியர்கள் போன்ற விடயங்கள் அடங்கும்.
இந்த விடயங்களை சரியான முறையில் கருத்திற் கொண்டு உரிய வரியை அறிவிட வேண்டும் என்று அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான அறிவிடப்பட வேண்டிய வரிகள் பற்றிய கலந்துரையாடலின் போது அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார்.
கடந்த வருடம் சேகரிக்கப்பட்ட வரியின் பெறுமதி 860 பில்லியன் ரூபாவை எட்டுகிறது. இந்த ஆண்டில் ஆயிரத்து 667 பில்லியன் ரூபாவை வரியாக திரட்ட வேண்டும் என்று நிகழ்வில் கலந்துகொண்ட உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இதுவரை காலமும் மக்கள் மீது முழு வரிச்சுமையை சுமத்தி அரசாங்கம் வருவாயை ஈட்டி வருகிறது.
இந்நிலையில் சிறப்பு வரப்பிரசாதங்களை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசியல்வாதிகளுக்கும் வரி விதிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.