வொசிங்டனின் ஆதரவு இலங்கைக்கு தேவை : மைத்திரிபால சிறிசேன
இலங்கைக்கு வொசிங்டனிடம் இருந்து அதிக ஆதரவு தேவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அந்நாட்டு செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, வொசிங்டனுக்கும் பீய்ஜிங்கிற்கும் இடையே பெரும் அதிகார அரசியலில் சிக்கியுள்ள, நமது நாடு தற்போது பெரிய உறுதியற்ற தருணத்தில் உள்ளதாக மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் பயணம்
மேலும் அவர் தெரிவிக்கையில், “தனது நாட்டின் குடிமக்கள் மோசமான வெளிநாட்டு கடன் நெருக்கடி, உயரும் பணவீக்கம், சுருங்கும் பொருளாதாரம் மற்றும் உணவு, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றில் இருந்து மீள முயற்சிக்கும் கொடுமையான வறுமையை தாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலர் அஃப்ரீன் அக்தருடனான சந்திப்பை உள்ளடக்கிய தமது அமெரிக்கப் பயணம் ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும், இலங்கைக்கான ஆதரவை மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது.
அத்துடன், இலங்கையை தற்போதைய சூழ்நிலையில் இருந்து காப்பாற்றவும், ஒன்றிணைந்து செயற்படவும் இராஜாங்க திணைக்களத்தை வலியுறுத்துவதே தமது இந்த பயணத்தின் முக்கிய நோக்கம்.
இலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில், தற்போதைய அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிறைய ஒத்துழைப்பு உள்ளது. இந்த உறவு வொசிங்டனில் இருந்து அதிக பொருளாதார ஈடுபாட்டிற்கு வழிவகுக்கும் என நான் நம்புகின்றேன் ” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |