இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று(8) நடைபெற்றது.
கிழக்கு திமோரின் திலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் சுகாதாரத் துறை
இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் நட்புறவுக்கும், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது நன்றியைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, குறிப்பாகக் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
இதற்கு இணையான வகையில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவை அமைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
கிராமப்புற மட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை மேலும் விரிவாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது தொடர்பில் இரு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் இதன்போது மேலதிக கவனம் செலுத்தப்பட்டது.