போர் முடிவுக்கு வழிவகுக்குமா! ரஷ்யா–உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய யோசனைகள்
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சில 'நல்ல யோசனைகளை' முன்வைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர்கள் இருவரும் கடந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
நல்ல யோசனைகள்
இருப்பினும், ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உடனடி முன்னேற்றங்கள் எதுவும் எட்டப்படவில்லை.
செய்தியாளர்களுடனான உரையாடலின் போது இந்த அமைதித் திட்டம் குறித்துப் குறிப்பிட்ட ஸெலென்ஸ்கி, அமெரிக்கத் தூதுவர்கள் முன்வைத்த புதிய யோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இது குறித்து விரிவான தகவல்களை வெளியிடாத அவர், முதலில் அமெரிக்கத் தூதுவர்களுடன் இணைந்து இந்த திட்டங்களில் பணியாற்றுவதற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து குளிர்கால வான் பாதுகாப்பு ஆதரவுப் பொதி குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் விரைவில் சந்திக்கவுள்ளதுடன், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.