இந்தியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர்
இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய பாரிய ஆட்கடத்தல் வலையமைப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், இந்திய தேசியப் புலனாய்வு முகமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புதுமடம் இம்ரான் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவர், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (13) கைது செய்யப்பட்டதாக இந்திய தேசியப் புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்கடத்தல் வழக்கின் 15ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள இம்ரான், நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கை
உரிய ஆவணங்களுடன் கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகப் போலியான வாக்குறுதிகளை வழங்கி, இலங்கைப் பிரஜைகளை இந்தியாவிற்குக் கடத்திச் செல்லும் சதியில் இவர் தீவிரமாக ஈடுபட்டதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து இதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், ஆட்கடத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைப்பதற்கு உதவுவதற்காக இந்தியாவிலுள்ள ஏனைய சந்தேகநபர்களுக்குச் சட்டவிரோத ஹவாலா பணப் பரிமாற்ற முறை மூலம் பணத்தை அனுப்பியுள்ளதாகவும் தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவிலுள்ள பல இடங்களில் உரிய பயண ஆவணங்களின்றி இலங்கைப் பிரஜைகள் தங்கியிருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து, 2021ஆம் ஆண்டு உள்ளூர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2021 ஜூலை 13ஆம் திகதி இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை பொறுப்பேற்றது.
ஏற்கனவே, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சீனி ஆபுல் கான் மற்றும் இம்ரான் கான் ஆகிய இரு சந்தேகநபர்கள் முறையே 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் கீழ் இந்த நாடுகடத்தல் மற்றும் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் இம்ரான் எப்போது, எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்த மேலதிக விபரங்களை இந்திய தேசியப் புலனாய்வு முகமை வெளியிடவில்லை.