அந்நியரின் ஆதிக்க சின்னமாக திகழும் யாழின் அதிசயம் : பிரம்மிப்பூட்டும் வரலாறு
ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தல நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது. குறிப்பாக கலாசாரங்கள் முதல் இயற்கையான இடங்கள் என வெளிநாட்டவர்களை கவரும் ஒரு இடமாகவும் நம் நாடு திகழ்கின்றது.
எமது நாடு சிறியதாக இருந்தாலும் எண்ணிலடங்காத பல அழகிய அம்சங்கள் அதனைப் பிரதிபலிக்கின்றன.
இந்தநிலையில், நம் நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடமாக காணப்படும் யாழ்ப்பாணக் கோட்டையைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காண்போம்.
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும்.
வட இலங்கையில் 327 ஆண்டுகள் ஐரோப்பியர் மேலாதிக்கம் நிலவியதன் அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களில் யாழ்ப்பாணக் கோட்டைக்கு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு.
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் இணைந்துள்ள இந்தக் கோட்டை இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாகக் காணப்படுகின்றது.
கி.பி 1621 அளவில் மண், கல்லைப் பயன்படுத்தி வட்ட வடிவில் போர்த்துக்கேயரால் இக் கோட்டை கட்டப்பட்டாலும் 139 ஆண்டுகள் (1658-1796) யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தரால் மீளக் கட்டப்பட்ட தோற்றத்துடனேயே தற்போதைய கோட்டை காணப்படுகின்றது.
அக்கோட்டையில் சில மாற்றங்களை பிரித்தானியர் தமது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தாலும் அவை ஒல்லாந்தர் காலக்கோட்டையின் அடிப்படைத் தோற்றத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதனால் தான் இக்கோட்டை ஒல்லாந்தர் காலக் கோட்டையென அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கேய ஆவணங்கள்
போர்த்துக்கேயரால் நான்கு பக்கச் சுவர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்கோட்டையை ஒல்லாந்தர் நட்சத்திர வடிவில் ஐந்து பக்கச் சுவர்களைக் கொண்டதாக மாற்றியமைத்தனர். இந்த வடிவில் இலங்கையிலுள்ள ஒரேயொரு கோட்டை இதுவாகும்.
62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி 40 அடி அகலமும், மேற்பகுதி 20 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இக்கோட்டைமீது படையெடுத்து வரும் எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சுவரின் உயரம் மேலிருந்து கீழ்நோக்கிப் பதிந்து காணப்படுகின்றது.
கோட்டையின் வெளிப்புறச் சுவர்களைச் சுற்றி 20 அகலத்தில் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன. நான்கு பக்கமும் பாரிய பீரங்கித் தளங்களையும், பாதுகாப்பு அரண்களையும், காவற்கோபுரங்களையும், சுரங்கங்களையும், சுடுதளங்களையும் கொண்ட இக்கோட்டையைச் சுற்றி இரண்டு மைல் தொலைவில் 200 போர்த்துக்கேயப் படைவீரர்களும், உள்ளூர் படைவீரர்களும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்ததாக போர்த்துக்கேய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
34 ஏக்கரில் அமைந்த கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், ஆயுதக் களஞ்சிய அறைகள், ஒல்லாந்தர் மீளக்கட்டிய கிறிஸ்தவ தேவாலயம், இந்து ஆலயம், பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆளுநர் மாளிகை, சிறைச்சாலைகள், பிற நிர்வாகக் கட்டடங்கள் என்பன காணப்படுகின்றன.
ஒல்லாந்தர் ஆட்சியில் கொழும்பு, காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகள் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட போதும், யாழ்ப்பாணக் கோட்டை மட்டும் இராணுவப் பாதுகாப்பு மையமாகவே செயற்பட்டு வந்துள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டைக் கட்டிய வரலாறு விபரமாகக் கூறப்பட்டுள்ளது.
அகழ்வாய்வுகள்
அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய கோறல் கற்கள் அயலில் உள்ள வேலணை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு முதலான இடங்களில் இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காங்கேசன்துறையிலிருந்து கோட்டை வரையில் உள்ளூர் மக்களை வரிசையாக நிற்கவைத்து காங்கேசன்துறையில் இருந்தும் கோட்டை கட்டுவதற்கான கற்கள் கொண்டுவரப்பட்டன.
கோட்டைப் பிரதேசத்தில் இதுவரை நான்கு இடங்களில் மாதிரிக் குழி அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011 இல் கோட்டை வாசற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது போர்த்துக்கேயர் காலத்திற்கு முந்திய சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு கோட்டை வாசல் தொடங்கும் இடத்திற்கும் கடற்கரைப் பக்கமாக உள்ள வீதிக்கும் இடையில் தற்போதைய கிறிஸ்தவ ஆலயத்திற்கருகில் முதலாவது அகழ்வாய்வு நடாத்தப்பட்டது.
இந்த இடத்தில் 10 X 6 அடி நீள அகலத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழியில் ஏறத்தாழ 2.5 அடி ஆழம் வரை நடாத்தப்பட்டஅகழ்வின் போது மூன்று வேறுபட்ட கலாசார மண் அடுக்குகளை அடையாளம் காணமுடிந்தது. இந்த கலாசார மண் அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் அமைந்த பலதரப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கிடைத்தாலும் மூன்றாவது கலாசாரப் படையில் மனித எலும்புக் கூடுகளுடன் பெருமளவு சீன மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மட்பாண்டங்களின் காலம் கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதால் மூன்றாவது கலாசாரப் படையின் காலம் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வருவதற்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதியாகத் தெரிகின்றது.
தொல்பொருட் சின்னங்கள்
அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு காலகட்டத்திற்குரிய தொல்பொருட் சின்னங்கள் ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட கோட்டைப் பிரதேசத்தின் தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. அவற்றுள் பல்வேறு காலத்தை சேர்ந்த பல நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள் கிடைத்திருப்பது சிறப்பான அம்சமாகும்.
இந்த ஆதாரங்கள் போர்த்துக்கேயர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தற்போதைய யாழ்ப்பாண நகரம் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கால அடிப்படையில் உறுதிப்படுத்த உதவுகின்றன.
இந்து சமுத்திர நாடுகளில் உள்ள கோட்டைகளில் யாழ்ப்பாணக் கோட்டை கம்பீரமும், அழகும், சிறந்த தொழில்நுட்பத் திறனும், ஐரோப்பியர் காலக் கலை மரபும் கொண்ட கோட்டை என்ற சிறப்பிற்குரியது.
மேலும், இது போன்ற கோட்டை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பிலும், மன்னார் சிலாபத்துறையிலும் என தமிழர் தாயக பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Laksi அவரால் எழுதப்பட்டு, 07 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.