2048ஆம் ஆண்டு வரை இலங்கை கடன் செலுத்த வேண்டும்
எவர், ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டுக் கடன் தொகையை 2048ஆம் ஆண்டு வரை செலுத்த நேரிடுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பொலன்னறுவை கதுறுவெல டிப்போ வளாகத்தில் ஊழியர்களை நேற்று (23) சந்தித்து உரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரை இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் தொகை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அரசின் மொத்த வெளிநாட்டுக்கடனில் எதிர்வரும் 05 வருடங்களில் முதிர்ச்சியடைவது நூற்றுக்கு 37 வீதமாகும். எஞ்சிய 51 வீதம் 06 தொடக்கம் 20 வருடங்களில் முதிர்ச்சி அடையும். ஏனைய நூற்றுக்கு12 வீதம் அடுத்த இருபது வருடங்களின் பின்னரே கடன் முதிர்வடையும்.
தற்போது நாம் 2023 ஆம் வருடத்தை கடந்து வருகின்றோம். 2048 வரை நாட்டை எவர் ஒருவர் ஆட்சி செய்தாலும், கடன் முதிர்ச்சி அடையும் போது அதனை செலுத்துவதற்கு நாம் அனைவரும் சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளோம்.
உதாரணமாக 2030 ஆம் ஆண்டு மார்ச் 28 இல், பத்து வருட இறையாண்மை பிணை முறி நிறைவடைவதால் 1,500 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளது.
பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு இல்லை
2030 ஆம் ஆண்டில் யார் ஆட்சி செய்தாலும் இந்த 1,500 மில்லியன் டொலரை செலுத்த தயாராக இருக்க வேண்டும். அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் விற்று பெற்றுக் கொண்டது 1,400 மில்லியன் டொலர்கள் மாத்திரமே. அதுபோன்று விற்பதற்கு இன்று எம்மிடம் எந்தச் சொத்துமில்லை.
எதிர்காலத்தில் யார் ஆட்சிக்கு வர முயற்சி செய்தாலும் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வாறு இந்த பழைய கடன் தொகையை செலுத்துவது என்பது பற்றி மக்களுக்கு குறிப்பிட்டாகவே வேண்டும். அதனால் இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
எனவே, நாம் அனைவரும் இணைந்து 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்து சபையை இலாபமீட்டும் நிறுவனம் ஒன்றாக மாற்றாவிட்டால், இந்த போக்குவரத்து சேவையை நடத்தி செல்ல முடியாது போகுமென்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |