ஓய்வு பெறும் அரச அதிகாரிகள் வாகனங்களை கொண்டு செல்லமுடியாது
அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை, உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்களிடம் ஒப்படைக்கும் முறையை நிறுத்துமாறு திறைசேரி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சு செயலாளர்கள் மற்றும் அரச வங்கிகள், கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை, அந்த அதிகாரிகளுக்கே மாற்றுவது தொடர்பான கேள்விகளை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்),எழுப்பிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உடன் நடைமுறைக்கு வரும் தடை
இந்தநிலையில் வாகனங்களின் உரிமைகளை மாற்றுவதில், அரச நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உட்கொள்கைகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில அரச நிறுவனங்கள், திறைசேரிக்கு தெரிவிக்காமல் வாகனங்களை மாற்றுவதற்கான ஆவணங்களை அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரச அதிகாரிகள், செயலாளர்கள் உட்பட்டவர்கள், ஓய்வு பெறும் வயதில், தாம் பயன்படுத்திய அவர்களது வாகனங்களை எடுத்துச் செல்வதை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு ஏற்கனவே உள்ளது.
எனினும் சில அரச நிறுவனங்கள், வாகனங்களை எடுத்துச்செல்லக்கூடிய தங்களுடைய சொந்த கொள்கைகளை வரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.