நூற்றுக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
அரச வருமானத்திற்கு முக்கியம் வாய்ந்த அரச நிறுவனங்களில் பாரியளவிலான ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
என்ற போதும் இதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஊழியர்கள் பற்றாக்குறை
மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்கள் பற்றாக்குறை மிக அதிகமாக காணப்படுகின்றது. சுங்க வரி, கலால் வரி இரண்டிலும் போதுமான ஊழியர்கள் இல்லை. நானூறு ஐநூறு ஊழியர்களை நாங்கள் தற்போது ஆட்சேர்க்க முடியாது.
இந்த நாட்டில் அதிகளவான பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கு பொருத்தமற்ற இடங்களில் தொழில் புரிகின்றார்கள். சிறந்த போட்டி பரீட்சை ஒன்றை நடத்தி வெளிப்படைத் தன்மையுடன் மிகவும் திறமையான இளைஞர்களை தெரிவு செய்வதற்கு நான் யோசனை முன்வைத்தேன்.
பாதிப்பு ஏற்படாத வகையில் ஆட்சேர்ப்பு
ஏனெனில் வரிகளை கணக்கிடுவது மிகவும் சிக்கலான ஒரு விடயம். அதற்கு மிகவும் திறமையானவர்கள் இருக்க வேண்டும். வரி ஆலோசகர் ஒருவர் கோப்புகளை காண்பிக்கும் போது அதில் உள்ள விடயங்களை விரைவில் உள்வாங்கி அவற்றை விவரித்து கூற கூடிய இளைஞர்கள் இருக்கின்றார்கள்.
தற்போது இருக்கும் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அவர்களின் பதவி உயர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆட்சேர்ப்புகளை முன்னெடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.