ரணிலின் லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானது! ஆதாரங்களை வெளியிட்டு ஹரின் அதிரடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தது உண்மை. அதற்கான ஆதாரங்கள் இதோ உள்ளன என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப பொதுச்செயலாளருமான ஹரின் பெர்னாண்டோ அழைப்பிதழை ஊடகங்களுக்குக் காண்பித்து விளக்கமளித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தெளிவான அழைப்பிதழ்
இது குறித்து ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறுகையில்,
"சி.ஐ.டி. போன்ற நிறுவனங்களைச் சிலர் ஏமாற்றுவது போல், சர்வதேச தரம் வாய்ந்த வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது.

பல லட்சம் ரூபா செலவு செய்து வழக்குக்காகத் தகவல் தேடுபவர்களுக்கு, இந்தத் தெளிவான அழைப்பிதழ் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் அறிவு மற்றும் ஆளுமை மீதுள்ள பொறாமையாலேயே இத்தகைய வீணான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
அநுரவின் அரசு
முழு விமானத்தையே வாடகைக்கு எடுத்துக்கொண்டு உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற ஜனாதிபதிகள் இருந்த நாட்டில், லண்டனுக்குச் சென்று வெறும் வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டுத் தனது கடமையைச் செய்த ஒரு மனிதரை இன்று பழிவாங்கத் துடிக்கின்றார்கள்.

ரணில் விக்ரமசிங்கவும் மைத்ரி விக்ரமசிங்கவும் மேற்கொண்டது சாதாரண சுற்றுலா அல்ல, அது ஒரு கௌரவமான விஜயம் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசு தவறான பாதையில் பயணிக்கின்றது. இது அவர்களது ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பமாகவே நான் பார்க்கின்றேன்.
இன்னும் சில காலங்களில் அரச அதிகாரிகள் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்திக்கொள்வார்கள். உயர் பதவிகளுக்காக இந்த அரசுக்குச் சார்பாகச் செயற்படும் சட்டத்தரணிகளும் ஒருநாள் ஓய்வுபெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening