யாழில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வு! வெளியான செலவு அறிக்கை
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட இரண்டு நிகழ்வுகளுக்காக பொதுமக்களை அழைத்து வர, 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி விஜயம்
அவர் ஜனவரி 16ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற “இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்காக பொதுமக்களை மைதானத்திற்கு அழைத்து வர 11 தனியார் பேருந்துகள் சேவைக்கு அமர்த்தப்பட்டதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிதி செலவு
அதே தினம் “முழு நாடும் ஒன்றாக” என்ற போதை ஒழிப்பு நிகழ்வு கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அந்தநிகழ்விற்காக Sri Lanka Transport Boardக்கு சொந்தமான 75 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் செலுத்தப்பட்டதாக மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்விரு நிகழ்வுகளுக்கும் மொத்தமாக 25,66,885 ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் விளக்கமளித்துள்ளது