வென்னப்புவவில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்து கடந்து செல்வதற்காக, அந்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக மூடப்பட்டிருந்தது.
பொலிஸார் மேலதிக விசாரணை
எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் வந்த தொடருந்தில் அவர் நேரடியாக மோதியதில், பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் குளியாப்பிட்டி பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் வேலைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.