கோட்டாபயவின் இரகசிய நகர்வால் ஒரே இரவில் எடுக்கப்பட்ட பதவி விலகல் முடிவு
கோட்டாபய ஒரு சிறந்த மனிதர். அதனை நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் அவரது கொள்ளளவு, அரசியல் அனுபவமற்ற தன்மை, இராணுவ கட்டமைப்பிலிருந்து சகல விடயங்களை பார்த்தமை, குடும்ப அரசியலுக்கு தேவைக்கு அதிகமாக அடிபணிந்தமை போன்றவற்றால் நாம் எதிர்பார்த்த கோட்டாபயவை காணமுடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
நெகிழ்வு போக்குடன் செயல்படவில்லை
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
திடீரென்று அரசியலுக்கு வந்து ஜனாதிபதியாக வந்தவர்கள் கூட உலகில் சிறந்த ஆட்சியை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் கோட்டாபயவின் குடும்ப உறவினர்கள் அநாவசியமான முறையில் அதிகாரத்தை கையில் எடுத்தனர். அதற்கு அவர் சுதந்திரமாக இடமளித்தார். நெகிழ்வு போக்குடன் செயல்படவில்லை. என்ன நினைத்தாரோ அதை செய்தார்.
இதற்கு உதாரணமாக ஒன்றை கூற முடியும், எரிவாயு மின்நிலைய செயல்பாடு தொடர்பான விடயம் வந்தது. இந்தியா ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து இந்த இயற்கை எரிவாயு மின்திட்டத்தை செய்வதற்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அது நாங்கள் ஆட்சிக்கு வர முன்னரே எடுக்கப்பட்டிருந்த ஒரு விடயமாகும்.
இது குறித்து நான் ஜனாதிபதியுடன் பேசியபோது ஜனாதிபதி இல்லை, மின்சக்தி விடயம் அரசாங்கத்திடமே இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்.
அதன்பின்னர் நான் இந்திய தூதுவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினேன். அதாவது நாங்கள் கேள்வி மனுவுக்கு போகபோகின்றோம். மேலும் இது அரசாங்கத்திடம் இருப்பது நல்லது என்பதே ஜனாதிபதியின் கருத்தாக அமைந்திருக்கின்றது என்று நான் இந்திய தூதுவருக்கு கடிதம் எழுதினேன்.
ஒரே இரவில் எடுக்கப்பட்ட பதவி விலகல் முடிவு
அதன் பின்னர் கேள்விமனு செயற்பாட்டுக்கு நாங்கள் போனோம். கேள்விமனு வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதன் அந்த காலத்தை மேலும் நீடிக்குமாறு எனக்கு கோரிக்கை வந்தது. பின்னர் மூன்று மாதங்கள் வழங்கப்பட்டன.
கேள்விமனு முடிக்கப்பட்டு அவற்றை மதிப்பீடு செய்து கொண்டிருந்தபோது ஒரு அமைச்சரவை பத்திரம் வந்தது. அதாவது நான் விடயதான அமைச்சராக இருக்கின்ற போது எனக்கு தெரியாமல் அமைச்சரவைக்கு ஒரு பத்திரம் வந்தது.
அதாவது அமெரிக்காவின் நியூ ஃபோட்ரஸ் என்ற நிறுவனத்துக்கு அதனை வழங்குமாறு அந்த அமைச்சரவை பத்திரம் வந்தது.
கேள்விமனு இல்லாமல் அது வழங்கப்பட்டது அப்போது நாம் நினைத்த கோட்டாபய ராஜபக்சவா என்று எண்ணினேன். அந்த சம்பவம் நடந்த தினம் இரவே நான் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என்று தீர்மானித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.