ராஜ வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகளை வீதிக்கு வர வைத்த பெருந்தோட்ட மக்கள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த கையோடு மற்றுமொரு தேர்தலை அறிவித்தது இலங்கையின் புதிய அரசாங்கம்.
கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தேசியப் பட்டியலோடு சேர்த்து மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்ற அநுர தரப்பிற்கு, அரியாசனம் கிடைத்தவுடன் தனது படைபலங்களை பலப்படுத்தவும், ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டிய கட்டாய தேவை எழுந்துள்ளது.
இதன் தொடக்கப்புள்ளியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நவம்பர் மாதம் 14ஆம் திகதி அதற்கான தேர்தலை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டு அமைதியான காலம் நடைமுறைக்கு வரும் என்று தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
தீர்மானமிக்க தேர்தல் களம்
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணை பொதுத் தேர்தலிலும் கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு தேசிய மக்கள் சக்தி களம் காணும் சூழ்நிலையில், பல கட்சிகளுக்கு இந்த தேர்தல் தீர்மானமிக்க தேர்தலாக மாறியிருக்கின்றது.
குறிப்பாக வடக்கு - கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் சார் அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் களம் அக்கினிப் பரீட்சை என்று கூட சொல்லலாம்.
ஏற்கனவே, ரணில் விக்ரமசிங்க, மகிந்தராஜபக்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று 50இற்கும் மேற்பட்ட மிகப் பிரபலமான அரசியல்வாதிகள் ஓய்வெடுத்துக்கொண்டுள்ள, அல்லது பின்வாங்கியுள்ள தேர்தலாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல புது முகங்கள் இந்த தேர்தலின் ஊடாக அவைக்கு வர அவா கொண்டுள்ளன.
இதில், பல அரசியல் வாரிசுகளும் அறிமுகம்...
இவ்வாறான நிலையில், நாட்டில் ஒரு தலைவரை தேர்வு செய்யும் சக்தியாக இருக்கும் சிங்கள மக்களின் வாக்குகளைத் தவிர்த்து தமிழ் மக்களின் வாக்குகள் இம்முறை எத்திசை நோக்கி பயணிக்கப் போகின்றன என்பதுதான் கேள்வி..
வடக்கு - கிழக்கு தமிழ் கட்சிகள் உட்கட்சிப் பூசல்களால் நாலா திசையில் பிரிந்து சென்றுள்ள நிலையில், மலையக தமிழ் கட்சிகள் தங்களது ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பரிசுப் பொருட்களோடு மக்களை அணுகி வருகின்றார்கள்.
மலையக தேர்தல் களம்
உண்மையில் மலையக தேர்தல் களம் என்பது, இலங்கையில் இருக்கும் ஏனைய பிரதேசங்களை விட சற்று வித்தியாசமானதாகத்தான் காணப்படும்.
தேர்தல் காலம் என்றால், தோட்டப் புறங்களுக்கு விஜயம் செய்யும் அரசியல் வாரிசுகளும், புதிதாக முளைத்த சமூக ஆர்வலர்களும், கோவிலுக்கு கொடுக்கப்படும் தகரமும், தோட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருட்களும், தோட்டத் தலைவர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளும், அரசியல்வாதிகளால் பொதுவெளியில் சுவைத்து உண்ணப்படும் ரொட்டியும் தான் மலையகத் தேர்தல் களமாக இதுவரை நாட்களும் இருந்திருக்கின்றது.
இதுவரை நாட்களும்தான் என்றால், இப்போது இந்தநிலை மாறிவிட்டதாக அர்த்தமில்லை. இவற்றோடு சேர்த்து சமூக ஊடக பிரசாரங்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என கால மாற்றத்திற்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட காரணிகளோடு இவையும் இணைந்துள்ளன.
அண்மைய நாட்களில் இவற்றை சமூக ஊடகங்களின் வாயிலாக பார்த்திருக்க முடியும், “ரொட்டியும் - பிளேன்டீயும் தான் எனக்கு மருந்து” என்று கூறிக் கொண்டு பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உண்மையைச் சொல்லப் போனால் ரொட்டி என்பது சுவைக்காகவோ, சத்துக்களுக்காகவோ உண்ணப்படும் ஒரு உணவு அல்ல. வெறும் கோதுமை மா உருண்டை. தேயிலை மலைகளில் ஏறி கடும் சிரமப்பட்டு உழைக்கும் போது பசி பிணி ஆட்கொள்ளக் கூடாது என்பதற்காக உண்ணப்படும் ஒரு உணவு. அவ்வளவே.. இதனை பிரசார உத்தியாகக் கையாண்டு ஏற்கனவே இளகிய மனம் படைத்த மலையக தாய்மாரை மேலும் இளக வைக்கும் முயற்சியை செய்து வருகின்றது புதிதாக முளைத்த அரசியல் வாரிசுகள்.
அண்மைய மாற்றங்கள்
தம்மை தேடி வந்து பிரசாரம் என்ற பெயரில் பொய்யோடு இணைத்து சுவாரசியம் குறையாது கதைகட்டும் அனைவரையும், பொய்யென்று அறிந்தும் தூற்றாது, உதறிச் செல்லாது உபசரித்து வழியனுப்பும் மலையக மக்களின் செயற்பாடுகளில் அண்மைக் காலங்களாக மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன.
தேடி வரும் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். வாதம் செய்ய ஆரம்பித்துள்ளனர். நீங்கள் எங்களுக்கு என்ன சேவை செய்தீர்கள், என்ன செய்யப் போகின்றீர்கள், நாங்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேட்பாளரின் முகத்துக்கு நேராக பொதுமக்கள் கேட்கும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் பதிவாகி வருகின்றன.
இதிலும், ஒரு துயரம் என்னவென்றால், அப்படி கேள்வி கேட்ட ஒரு பொதுமகனை அந்த வேட்பாளரும் வேட்பாளருடன் உடன் இருந்தவர்களும் கடுமையாக அச்சுறுத்தி, கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நபர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதுதான் மலையக அரசியல் கலாசாரம். அரசியல்வாதிகள் கூறுவதை அமைதியாக கேட்க வேண்டும், மீள கேள்வி எழுப்பக் கூடாது என்பது அரசியல்வாதிகளின் எழுதப்படாத விதி.
கேள்வி கேட்டதற்காக அச்சுறுத்தி, தாக்குதல் நடத்த முற்படுவார்களாயின் இப்படி ஒருவரை நாடாளுமன்ற கதிரையில் அமர்த்தி அழகுபார்ப்பதால் மலையக மக்களுக்கு என்ன நன்மை நேர்ந்துவிடப் போகின்றது.
வாக்களித்த மக்களுக்கு என்ன நன்மை
அதேபோல, இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் மலையகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் வாரிசிடம் பிரசாரக் கூட்டத்தின் போது ஒருவர் கேள்வி எழுப்புகிறார். எங்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று.. ஆனால், “என்னிடம் என்ன இருக்கிறது உங்களுக்கு தருவதற்கு என்று விட்டேற்றியாக பதில் கூறி அங்கிருந்து நகர்ந்தார் அந்த அரசியல் வாரிசு..”
இந்த அரசியல் வாரிசுக்கு இது இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் களம். இதற்கு முன்னர் நடந்த தேர்தலில் தோல்வியுற்று கடந்த ஐந்து வருடங்களாக அமைதியாக கோமா நிலையில் இருந்து விட்டு தற்போது மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். கேட்டால், புலி பதுங்கியிருந்ததாம்.. இதுவரை நாட்களும் அமைதியாயிருந்து தேர்தல் காலத்தில் மட்டும் தலைகாட்டும் அந்தப் புலி பதுங்கியே இருந்திருக்கலாம் என்பதுதான் அரசியல் ஆர்வலர்களின் கருத்து. ஒருவேளை, வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்றாலும் மீண்டும் ஒரு ஐந்து வருடம் பழக்கதோசத்தில் பதுங்கியிருந்து விட்டார் என்றால் வாக்களித்த மக்களுக்கு இந்த புலியால் என்ன பிரயோசனம்..
இதற்கு முன்னர் இருந்த நாடாளுமன்றத்தில் கூட, மலையகத்தில் இருக்கக் கூடிய இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயில்லாப் பூச்சியாக, அவைக்கு பாரமாக, பசை கொண்டு ஒட்டினாற் போல கதிரையில் அமர்ந்திருந்துவிட்டு வந்தனர். அவர்களால் மக்களுக்கு என்ன நன்மை நேர்ந்தது, எத்தனை பிரச்சினைகளை அவர்கள் அவையில் முன்வைத்து குரல் எழுப்பினார்கள் என்றால் பதில் பூச்சியம் தான்.
தேர்தல் பிரசாரங்களின் போது அதிகமாக காணக்கிடைத்தது, சமூக வலைத்தள பிரசாரங்கள். சிறப்பு காணொளிகள், தன்னை மிகப் பெரிய ஹீரோவாகக் காட்டி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட காணொளிகள். நாங்கள் பல சேவைகளை செய்துவிட்டுத்தான் வந்து வாக்கு கேட்கின்றோம் என்கிறார்கள். வெளிப்படையாக நோக்கும் போது கட்சித் தாவல்களை தவிர அவர்கள் வேறு என்ன சேவைகளை செய்தார்கள் என்பது மக்களுக்கும் தெரியாது, அந்த காணொளியை பதிவு செய்தவருக்கும் தெரியாது.
கிடப்பில் கிடக்கும் அபிவிருத்தி
அடுத்து, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு சென்று தன்னுடைய இயலாமையை வெளிப்படையாக காண்பிப்பது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இரண்டு பிரதான தமிழ் அரசியல்வாதிகள் பட்டப்பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். எப்படிப்பட்ட தலைவர்களை நாங்கள் தேர்வு செய்து நாடாளுமன்றம் அனுப்பியிருக்கின்றோம் என்று மக்கள் நொந்துக்கொண்ட தருணம் அது.
இப்போது, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மலையகத்தின் பிரதான கட்சியொன்றின் வேட்பாளர், பல வருடங்களாக அரசியலில் இருப்பவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர், ஒரு ஆசிரியர் என்று பல தகுதிளைக் கொண்டிருப்பதாய் காட்டிக்கொள்ளும் அந்த நபர், மலையகத்தில் மொத்தம் எத்தனை குடும்பங்களுக்கு தனிவீடு வழங்கப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு நிலம் வேண்டும் என்பது தெரியாமல் சிறுபிள்ளையாய், நான் இதற்கு தயாராக வரவில்லை என்று காரணம் கூறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்ததை காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் அரியாசனம் ஏற்றிப் பார்ப்பதால் மக்களுக்கு என்ன நன்மை நேர்ந்துவிடப் போகின்றது. குறிப்பாக சொல்லப்போனால், மலையகத்தில் மாத்திரம் தான் தனிவீட்டுத் திட்டம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல வருட கால தேர்தல் பிரசார முறைகள் மாறாமல் இருக்கின்றன.
கிட்டத்தட்ட நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது கட்டி முடிக்கப்பட்ட சில தனி வீடுகள் இப்போது வரைக்கும் மக்களிடம் கையளிக்கப்படாமல் இருக்கின்றன. அதனையடுத்து இரண்டு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்த போதும் அந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகளின் பணிகள் பூரணப்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதுதான் மலையக அபிவிருத்தி மற்றும் அரசியல் திட்டங்கள்.
ஆனால், தேர்தல் காலம் என்று ஒன்று வந்தால் மட்டும் மீண்டும் மீண்டும் அதே தனி வீட்டுத் திட்ட வாக்குறுதிகளும், சம்பள அதிகரிப்பு தொடர்பான வாக்குறுதிகளும் மாறாமல் அப்படியே பின்தொடர்கின்றன.
மலையகத்தில் உள்ள குடும்பங்களுக்கு தனி வீட்டு திட்டங்களை அமைத்துக் கொடுப்பது என்றால் எவ்வளவு நிலம் வேண்டும் என்பதே தெரியாத ஒரு தரப்பினருக்கு, அந்த வாக்குறுதியை மட்டும் நம்பி மக்கள் வாக்களித்தால், தனி வீடு என்பது இப்போது அல்ல எப்போதுமே நிறைவேறாத கனவாகத்தான் இருக்கப் போகின்றது.
வாக்கு வங்கி சரிவு
இது இவ்வாறு இருக்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பாரிய அளவு இல்லையென்றாலும் வெளிப்படையாக தெரியக் கூடிய வகையில் ஒரு மாற்றம் மலையக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. கிட்டத்தட்ட மலையகத்தின் பிரதான கட்சிகளின் பரம்பரை வாக்கு வங்கி பாரியளவில் சரிந்துள்ளது.
நாங்கள், கூறியதை மலையக மக்கள் கேட்பார்கள், கேட்டே ஆக வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் முதலாளித்துவ மன நிலைக்கு இந்த மாற்றம் பெரிய அடி என்றுதான் கூற வேண்டும். மலையகத்தில் இருந்த பரம்பரை வாக்கு என்ற ஒரு மரபும் ஜனாதிபதி தேர்தலின் போது ஆட்டம் கண்டுள்ளது.
இதனையடுத்து, கட்சித் தாவல்களும், போட்டிகளும் என்று தங்களது கட்சிகளின் வீழ்ச்சியை தாங்களே உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த அரசியல் தலைவர்கள். ஜனாதிபதி தேர்தலின் எதிரொலி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதற்காக, பரிசுப் பொருட்களை வழங்கி மக்களை காக்கா பிடிக்க நினைக்கின்றனர் அந்த தலைவர்கள்.
குறிப்பாக, மலையகத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களை அழைத்து அனைவருக்கும் புதிய உடைகளை வழங்கி அழகு பார்த்த கட்சி, வாக்குகளுக்காக ஒரு தொகை பணத்தையும் வாரி வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களின் வாயிலாக அறியக் கிடைத்தது. இவற்றை தவிர இன்னும் இதர பரிசுப் பொருட்களையும் அவர்கள் வழங்கியிருக்கக் கூடும்.
இப்படி, தங்களது தோல்வியை தவிர்க்க பரிசுப் பொருட்களைக் கொடுத்து மக்களை தம்வசம் ஈர்ப்பதற்கு பதிலாக இதற்கு முன்னர் கிடைத்திருந்த வாய்ப்புக்களையும், பதவிகளையும், பொறுப்புக்களையும் சரிவர செய்திருந்தால், மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பணியாற்றியிருந்திருந்தால் இப்படியொரு நிலை தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.
நன்றிக் கடன் செலுத்தாதீர்..
இப்போதும், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தங்களது கட்சி செய்த வேலைகளைத்தான் மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேட்கின்றார்களே தவிர, நாங்கள் என்ன செய்தோம், என்ன செய்யப் போகின்றோம் என்பதை கூறவில்லை அவர்கள். எப்போதோ செய்த சேவைகளுக்கு மலையக மக்கள் வருடக்கணக்கில் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம். மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களுக்கு முதலில் ஏன் நன்றிக் கடன் செலுத்த வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பட்ட மாற்றம், மலையக கட்சிகளிடத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மை. இதனை கட்சித் தலைவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரை எதிர் எதிர் கட்சிகளாக இருந்தவர்கள் இன்று வாக்கு வங்கி சரிந்த பின்னர், ஒன்று எங்களுக்கு வாக்களியுங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு.. புதிதாக யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே கூறும் அளவுக்கு அந்த தாக்கம் இருக்கின்றது.
இதனை இப்படியே தக்கவைத்துக் கொள்வதும், நன்றிக்கடன் என்ற பெயரில் மீண்டும் அதே பரம்பரை அரசியலுக்குள் மூழ்கிப் போவதும் மக்களிடம் தான் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், பல புது அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன. பல புது முகங்கள் மக்கள் முன்னிலையில் பிரசன்னமாகியிருக்கின்றனர். ஏற்கனவே தெரிந்த பழைய முகங்களும், சேவை செய்தவர்களும் கூட உண்டு. யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை மூன்றாவது தரப்பினர் முடிவு செய்ய முடியாது, கட்டாயப்படுத்தவும் முடியாது.
சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் மலையக மக்கள் தற்போது உள்ளனர். இது காலத்தின் தேவையும் கூட... பரம்பரையாக நாங்கள் இவருக்குத்தான் வாக்களிப்பது என்ற மன நிலையில் இருந்து விலகி, சற்று சிந்தித்து வாக்குகளைச் செலுத்துங்கள்..
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 11 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.