மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள்
நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி குறித்து பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடத்தில் காணப்படுகின்றது.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
மிக முக்கியமாக பலம்பொருந்திய பல மூத்த அரசியல்வாதிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரும், பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற மூத்த அரசியல்வாதிகளும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இவர்களின் இந்த முடிவு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்காக பல புது முகங்கள் இம்முறை களம் காண்கின்றன.
தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன. மக்களை நேரே சென்று சந்திப்பது, துண்டு பிரசுரங்கள், பிரசார அட்டைகள் விநியோகம், சமூக ஊடக பிரசாரம் என்று வேட்பாளர்கள் அந்த கதிரைக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இதனையும் தாண்டி, தாங்கள் இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ததாக கூறி பிரத்தியேகமான காணொளிகளை தயார் செய்து அதனூடாகவும் தங்களது பிரசார நடவடிக்கைகளை வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்
இவ்வாறான நிலையில், அதிகமான தமிழ் பிரதேசங்களில், வழங்கப்படும் பிரசார அட்டைகளில் வேட்பாளர்களின் முகங்களுடன் இணைத்து நாட்காட்டி, சாமிப் படங்கள் போன்றவற்றை அச்சிட்டும் வேட்பாளர்கள் விநியோகித்து வருகின்றார்கள்.
தமிழர்கள் என்றாலே கடவுள் நம்பிக்கை, அதன் மீதான பற்று என்பன அதிகமாகவே இருக்கும். இது தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிப் பிணைந்தது.
தமிழுக்கு மாத்திரமன்றி தமிழ் கடவுள்களுக்கும் தொன்மையான வரலாறு உண்டு. தாங்கள் வழிபடும் கடவுளின் சித்திரங்களையும் அவர்களாகவே பாவித்து வழிபடும் மரபும் தமிழர்களுக்கு உண்டு.
இப்படியான நிலையில், வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் இணைத்து சாமிப் படங்களை அச்சிட்டு வழங்குவது என்பது எந்த வகையில் பொருத்தமான செயல் என்ற கேள்வி எம்முள் காணப்படுகின்றது.
நிச்சயமாக கடவுள்களின் புகைப்படங்களை கிழித்தெறியவோ, எரிக்கவோ, வீசிவிடவோ தமிழர்களால் முடியாது. ஆனால், ஒரு அரசியல்வாதியின் புகைப்படத்துடன் இணைத்து இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் போது அதனை வழிபடவும் முடியாது.
அரசியல்வாதிகள் ஒன்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் அல்ல... இது பிழையான செயற்பாடு என்பதோடு, தர்மசங்கடத்திற்குள் மக்களை தள்ளும் செயற்பாடாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறான அரசியல்வாதிகள் தங்களை தாங்களே கடவுளாக நினைத்துக் கொள்கின்றனரோ என்ற கேள்வியும் எழுகின்றது.
ஒரு தேர்தலில் வெற்றிபெறவேண்டுமெனில், பயனுள்ள திட்டங்களை மக்களிடத்தில் முன்வைக்க முடியும். மக்களுக்கு தன்னால் சிறந்த தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவோ சிறந்த சேவையை வழங்கவோ தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.
ஆனால், இவை அனைத்தையும் தாண்டி சமகால தேர்தல் களத்தில் நடப்பதெல்லாம், பரிசுப் பொருட்கள் வழங்குவதும், உணவு வழங்குவதும், ஆட்டம், கொண்டாட்டம் என நடனமாடுவதும் தான் இன்றைய பிரசார உத்திகளாக இருக்கின்றன. குறிப்பாக மலையக பகுதிகளில் இந்த நிலை அதிகரித்து காணப்படுகின்றது.
இந்தியாவில் அரசியல்வாதிகளின் கலாசாரமாக உள்ள இலவசம் என்ற, மாயை இலங்கையிலும் பிரபல்யம் அடைந்துள்ளதாக அண்மைய செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதற்கமைய இலங்கையின் பல பகுதிகளில் மக்களை தம்வசம்படுத்த பல இலவசங்களை மக்கள் முன்னிலையில் தேர்தல்கள் வேட்பாளர்கள் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.
இதை காலம் காலமாக செய்து வருவதாலோ என்னவோ புதிதாக அரசியலுக்குள் நுழையும் வாரிசுகளும், புது முகங்களும் கூட இதே உத்திகளைப் பின்பற்றி வருகின்றன. கிட்டத்தட்ட அடிப்படையை மாற்ற முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
எது எவ்வாறாயினும், இது போன்ற கேலிக் கூத்துகளுக்கு மயங்கிவிடாது பொதுமக்கள் சுயமாக சிந்தித்து தங்களது வாக்குகளை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 09 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.