எரிபொருள் இருப்பு தொடர்பான செய்திகள் பொய்யானவை: வெளியாகியுள்ள அறிவிப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிபொருள் இன்றி மூடப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நியாயமான முறையிலான விநியோகம்
தற்போதுள்ள எரிபொருள் இருப்பு அனைத்து துறைகளுக்கும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டியிருப்பதால், முறையான நிர்வாகத்துடன் எரிபொருள் இருப்புக்களை விநியோகிக்க எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி தற்காலிக மற்றும் குறுகிய கால தடைகள் ஏற்படுவது சாதாரணமான நிலைமை என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் இருப்பு
நாளாந்தம் 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இது எரிபொருள் தட்டுப்பாடு காலத்துடன் ஒப்பிடும் போது அதிக எண்ணிக்கையாகும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



