இலங்கையில் தொடரும் எரிபொருள் வரிசை
இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினமும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான சூழலில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிகப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
வவுனியா
வவுனியா மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக எரிபொருள் எதுவும் வராத நிலையில் பொதுமக்கள் தமது வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் குளிர்பானம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெட்ரோலை பெற்று செல்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் விநியோகிக்கப்படும் என பொற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்றைய தினம் புதன்கிழமை அறிவித்திருந்தது.
அதனை அடுத்து இன்றைய தினம் அதிகாலை 4 மணி தொடக்கம் பெட்ரோலை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்தனர்.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொழும்பில் நேற்றைய தினம் ஏற்றிய பெட்ரோல் இன்று காலையே யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அதன் பின்னரே விநியோக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரம் பெட்ரோல் விநியோகம் செய்துள்ளனர்.
கொட்டகலை
கொட்டகலை பிரதேசத்தில் 200 ரூபா மண்ணெண்ணெய் பெற சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று அதிகாலை முதல் நிற்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்கள் மண்ணெண்ணை அடுப்பின் மூலமே சமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாரிய அளவு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால் மண்ணெண்ணை பாவனையாளர்கள் பல மணித்தியாலங்கள் கிட்டதட்ட 18, 20 மணித்தியாலங்கள் வரிசையில் நின்று பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.