இலங்கையின் முதல் பெண் தூதரான மானெல் அபேசேகர காலமானார்
இலங்கையின் வெளியுறவுச்சேவையின் (முன்னைய சிலோன் வெளிநாட்டுச்சேவை) முதல் பெண் தூதரான இரங்கானி மானெல் அபேசேகர தனது 93வது வயதில் காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்றுள்ளன.
1933 ஓகஸ்ட் 14, அன்று பிறந்த இவர் முன்னாள் அரச அதிகாரியும் செனட்டருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாவார்.
பொதுச்சேவை ஆண்களின் ஆதிக்கம்
பொதுச்சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், 1958 ஆம் ஆண்டு, இவர் வெளியுறவுச் சேவையில் இணைந்து சாதனை படைத்தார். ஜெர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதராகப் பணியாற்றினார்.

தாய்லாந்து தூதராக இருந்தபோது, சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானத்தின் கடத்தல்காரருடன் சுமார் 40 மணி நேரம் சுமுகமாகப் பேசி, எவருக்கும் காயம் ஏற்படாமல் விவகாரத்தைத் தீர்த்து வைத்தார்.
அணிசேரா உச்சிமாநாடு (1976): கொழும்பில் நடைபெற்ற 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை தலைமை அதிகாரியாக (Chief of Protocol) பணியாற்றினார்.
இராஜதந்திர பொறுப்பேற்பு
1970-இல் தாய்லாந்திற்கு இராஜதந்திரப் பொறுப்பேற்கச் சென்றபோது, இவரை வரவேற்பதற்காக வந்த ஓட்டுநர் ஒரு பெண் தூதரை எதிர்நோக்காததால் "வெல்கம், மேடம்- சேர் என வாழ்த்தினார்.
இந்த நிகழ்வை மையமாகக் கொண்டு 2010-இல் "Master-Sir" என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை இவர் வெளியிட்டார்.
இவரது வழிகாட்டலும் முன்னோடிப் பணியும் இலங்கையின் பல பெண் இராஜதந்திரிகளுக்குப் பெரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.