வரலாற்றில் 75 வருடங்களாக இல்லாத நிலை இலங்கையில்: ஏற்பட்ட பாரிய மாற்றம்
இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது நாட்டில் காணப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் நினைவுக்கூற வேண்டிய அவசியமில்லை என பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க (R.H.S Samaratunga) தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் 75 வருடங்களாக இப்படியொரு நிலையை கண்டதும் கேட்டதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி தவித்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட அரசாங்கத்திடம் ஒரு சதமும் இருக்கவில்லை. 2022 ஏப்ரல் மாதம் நாட்டின் டொலர் கையிருப்பு 19 மில்லியனாக மாத்திரமே காணப்பட்டது.
வரலாற்றில் 75 வருடங்களாக இப்படியொரு நிலையை கண்டதும் கேட்டதும் இல்லை. நாட்டுக்கு வந்த எரிவாயு கப்பல் வெளியில் நின்றது.
அந்த எரிவாயுவை பெற்றுக் கொள்ள 35 இலட்சம் ரூபா எம்மிடம் இருக்கவில்லை. கப்பலுக்கு தாமதக் கட்டணத்தை செலுத்தி நிறுத்தி வைத்திருந்தோம். அவ்வாறான நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்று கட்டியெழுப்பினார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நாட்டுக்குள் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டு மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு 19 மில்லியன் டொலர்களாக மாத்திரமே காணப்பட்டது.
2024 பெப்ரவரி மாதம், மத்திய வங்கியின் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்களின் பலனாக நாட்டில் மிக் குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் அறிக்கை
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக உலக வங்கி (World Bank) தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடு 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், நாட்டில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் காணப்படுவதாக உலக வங்கியின் சமீபத்திய ஈராண்டு வளர்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக காட்டப்படும் பொருளாதார வளர்ச்சி
நாட்டில் தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி (M.Ganeshamoorthy) தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் மாயை ஒன்றை ஏற்படுத்த முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் கொள்கைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இதனிடையே, பொருளாதார வளர்ச்சி என்பது வெறுமனே பொருளாதார காரணிகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதல்ல.
அது அரசியல் காரணிகளாலும் தீர்மானிக்கப்படும். நாட்டில் தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீள்வதாக மாத்திரமே காட்டப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான இடர்கள் நீங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |