35 இலட்சம் ரூபாய் இல்லாத இலங்கை! அதிகரித்துள்ள மத்திய வங்கியின் கையிருப்பு
2024 பெப்ரவரி மாதம், மத்திய வங்கியின் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரித்திருக்கிறது என பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க(R.H.S. Samaratunge) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது நாட்டில் காணப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் நினைவுக்கூற வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறான நெருக்கடியை ஒருபோதும் கேள்விபட்டத்தும், கண்டதும் இல்லை. இவ்வாறான நிலைமையே இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி தவித்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட அரசாங்கத்திடம் ஒரு சதமும் இருக்கவில்லை. 2022 ஏப்ரல் மாதம் நாட்டின் டொலர் கையிருப்பு 19 மில்லியனாக மாத்திரமே காணப்பட்டது.
வரலாற்றில் 75 வருடங்களாக இப்படியொரு நிலையை கண்டதும் கேட்டதும் இல்லை. நாட்டுக்கு வந்த எரிவாயு கப்பல் வெளியில் நின்றது. அந்த எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள 35 இலட்சம் ரூபாய் எம்மிடம் இருக்கவில்லை. கப்பலுக்கு தாமதக் கட்டணத்தை செலுத்தி நிறுத்தி வைத்திருந்தோம்.
அவ்வாறான நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்று கட்டியெழுப்பினார். ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நாட்டுக்குள் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2022ஆம் ஆண்டு மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு 19 மில்லியன் டொலர்களாக மாத்திரமே காணப்பட்டது. 2024 பெப்ரவரி மாதம், மத்திய வங்கியின் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரித்திருக்கிறது.
ஜனாதிபதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பலனாக நாட்டில் மிக் குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |