அடுத்த சில நாட்களில் காத்திருக்கும் மோசமான நிலைமை! பொருளாதாரப் பேரிடரைத் தமிழர் தாயகம் எதிர்கொள்வது எப்படி!!
இலங்கை என்றுமி்ல்லாதளவிற்குப் பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கின்றது. இனவாதத்தின் வழியில் தவறாக வழிநடத்தப்பட்ட மக்களும், அந்த இனவாதப் பேயைக் காப்பாற்றவென அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளும் இந்நிலையை உருவாக்கியுள்ளனர்.
ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகம், குடும்ப ஆட்சி, தவறான நிர்வாகக் கட்டமைப்பு, வினைத்திறனற்ற அரச சேவை, தேவையற்ற பாதுகாப்புச் செலவீனம், கடன் போன்றவை இலங்கையை இவ்வளவு விரைவாகப் பொருளாதாரப் பேரிடரினுள் தள்ளியிருக்கின்றது.
இந்தச் சரிவிலிருந்து இலங்கையால் வேகமாக மீளெழுச்சிபெறமுடியுமா எனக் கேட்டால், சாத்தியமில்லை என்றே பதிவிடத்தோன்றுகின்றது. அதுவும் நாட்டின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் வாழும் பெரும்பான்மையின மக்களால் இதனை வெல்வது சிரமம் என்றே கூறவேண்டும். இவ்வாறு பதிவிடுவதற்கு பல்வேறு காரணங்களை இலங்கை இன்றும் கொண்டிருக்கின்றது.
நாடு பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கியிருக்கிறது. அன்றாடத் தேவைக்கான ஒவ்வொரு பொருளைப் பெறவும் மக்கள் நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். கடுங்கோபத்தில் கலவரக் குரல் எழுப்புகின்றனர். போராடுகின்றனர். அரசியல்வாதிகளைத் தூசிக்கின்றனர். ஆனால் இவையெதனையும் கருத்திலெடுக்காதவர்களாகவே குறித்த மக்களது அரசியல் பிரதிநிதிகள் செயற்படுகின்றனர்.
நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் எவ்விதப் பொறுப்புமின்றி, தம் பதவிகளுக்காகவும், அதிகாரத்திற்காகவும் வெறியாட்டம் ஆடும் அரசியல்வாதிகளினால் நாடாளுமன்ற – ஜனநாயக ஆட்சிப் பொறிமுறை மீதான நம்பிக்கையையே மக்கள் இழந்திருக்கின்றனர். இவ்வாறானதொரு பொறுப்பற்ற – பலீவீனமான நாடாளுமன்றத்தினால் நாடு எதிர்கொண்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சரிவைக் கையாள முடியாது.
இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்பதற்கு கைகொடுக்கத் தயாராயிருக்கும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்களும் இந்நாட்டின் ஆட்சிக்குழப்பங்களுக்கு உடனடித் தீர்வு தேவை என்பதனையே முன்நிபந்தனையாக வைக்கின்றன. ஆனால் இலங்கையின் பொருளாதார நிலைமையை விளங்கிக்கொண்டு, பொறுப்புக்கூறக்கூடிய அமைச்சரவையொன்றை அமைப்பதற்குக் கூட முடியாதளவுக்கு அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காணப்படுகின்றது.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய தேவைகளின் அதிகரிப்புக்கூட பொருளாதாரச் சரிவு நிலையை சீர்செய்யக்கூடிய காலத்தைத் தாமதப்படுத்தும் காரணியாகவே பார்க்கப்படுகின்றது. மக்கள் தொகைக்கும், கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கைக்கும் அதளபாதாள வேறுபாடுண்டு.
சனத்தொகையை விஞ்சியளவுக்கு இறக்குமதிசெய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையுள்ளது. இந்தக் கணக்கு வாகனங்களுக்கு மாத்திரமல்ல, வீடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்துவகையான இலத்திரனியல் பொருட்களுக்கும் இதேநிலைதான். பன்னாட்டு வணிக நிறுவனங்களின் இலாபத்திற்காக, நுகர்வோர்களாகிய சாதாரண மக்களின் ஆசையைத் தூண்டி, அவர்தம் பொருளாதார பலத்தைவிட பன்மடங்கு மேலதிகமான வசதி வாய்ப்புக்கள் உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு எப்படி கடன் வாங்கி நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சித்து முகங்குப்புற விழுந்ததோ, அதைப் பின்பற்றியே நாட்டு மக்களும் கடன்களினால் தம் வசதிவாய்ப்புக்களை உருவாக்கிக்கொண்டனர். ஆனால் அதற்கு ஏற்ப அவர்களால் வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியவில்லை.
இலங்கை போன்று அந்நிய செலாவணியை நம்பி வாழும் நாடொன்று இவ்வாறானதொரு சுரண்டல் பொருளாதார பொறியை நாட்டிற்குள் அனுமதித்தமையே முதற்தவறு. அதுவும் அரசின் தவறு. எனவேதான் இந்தப் பொறி குறித்தெல்லாம் விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ளாத மக்கள் கூட்டம் தெருவில் நின்று திண்டாடிக்கொண்டிருக்கிறது. தம் நாட்டினை உடனடியாக செல்வச்செழிப்பு மிக்கதாக மாற்றக்கூடிய தலைவர் வரும்வரைக்கும் தெருவில் நின்று போராடுவோம் என்கிறது.
இவ்வாறு மக்களின் தேவை வானளவாக இருக்கும்போது, அரசு இந்தியாவிடமும், சீனாவிடமும், ஏனைய நாடுகளிடமும் கடன்பெற்று இறக்குமதி செய்யும் எரிபொருள் உட்பட்ட பொருட்களானவை கடுகளவாக இருக்கின்றது. எனவே தொடர்ச்சியாகப் பொருட்களை இறக்குமதி செய்தால் மாத்திரமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். ஆனால் துரதிஸ்டம் தொடர்ச்சியாக கடனடிப்படையில் பொருட்களைக்கொடுக்க யாரும் தயாராக இல்லை.
நிபந்தனையற்ற கடனை வழங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள்கூட தம் அரசியல் தேவைகள் நிறைவேறிய பின், இந்தக் கடன்களை நிறுத்திக்கொள்ளும். எனவே இப்போதிருக்கின்றதைவிட மோசமான பொருளாதாரச் சவாலை இலங்கை மக்கள் இனிமேல்தான் எதிர்கொள்ளப்போகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொள்ள மக்களை அரசு தான் தயார்படுத்தவேண்டும். ஆயினும் அதற்கான எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. விழிப்புணர்வற்ற மக்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு பொறுமை காக்கமாட்டார்கள். ஆளையாள் அடித்துக்கொள்ளும், கொள்ளையில் ஈடுபடும் கலவரங்கள் நோக்கியே அந்த மக்கள் வரிசையாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசின் எந்த வேலைத்திட்டங்களிலும் தமிழர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. போராகட்டும், பொருளாதார தடையாகட்டும், பேரனர்த்தங்களாகட்டும் அனைத்தின்போதும் தமிழர்கள் தனித்தே நின்றனர். இடர்களோடு போராடி வென்றனர். இப்போதும் அப்படித்தான்.
பொருளாதாரப் பேரிடர் பேரிடியாகத் தமிழர் முன் வந்துநிற்கிறது. இதற்கு முன்பான காலங்களில் பேரிடர்கள் வந்தபோதெல்லாம் தமிழர்களை சரியான வழியில் நடத்திச்செல்லக்கூடிய பலமிக்க அமைப்பொன்று இருந்தது. பொருளாதாரத் தடையெனில் விறகு வெட்டுவதிலிருந்து மாட்டைக் கொண்டு உழவு செய்து பயிரிட்டு, அதனைச் சரியான முறையில் களஞ்சியப்படுத்தி, விநியோகம் செய்யும் வரைக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. சரியாக நடைமுறைப்படுத்தவும், களத்தில் இறங்கி மேற்பார்வை செய்யவும் எந்த நலனையும் எதிர்பார்க்காத போராளிகள் இருந்தனர்.
ஆனால் நிலைமை இப்போது அப்படியல்ல. உடனடியாகக் களத்தில் இறங்கிக் காரியமாற்ற வேண்டிய தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள், பொருளாதார மேம்பாட்டு நிறுவனங்கள், புலம்பெயர் தமிழர்கள் இனியும் மௌனித்திருக்க முடியாது. வடக்கு, கிழக்கு பாகங்களை இணைத்த வகையில், சுதேசிய பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் செயற்றிட்டங்களை இவ்வமைப்புகள் உருவாக்கவேண்டும். அதனை நோக்கிய விழிப்புணர்வையாவது மேற்கொள்ள முன்வரவேண்டும்.
போர்க்கால பொருளாதாரத் தடைகளையே இலகுவில் வென்றோம், வரிசையி்ல் நிற்பதெல்லாம் எமக்கு பெரிய விடயமே அல்ல என இப்போதும் கூறிக்கொண்டிருக்க முடியாது. அப்போதிருந்த தேவையினளவிற்கும், இப்போதிருக்கும் தேவையினளவிற்கும், அப்போதிருந்த நிர்வாக செயற்றிறனுக்கும், இப்போதிருக்கிற நிர்வாக செயற்றிறனுக்கும் இடையில் பாரியளவு வித்தியாசங்கள் உள்ளன.
எனவே இதனை விளங்கிக்கொண்டுதான் புதிய பொருளாதார செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும். வடக்கு, கிழக்கு பாகங்களில் பிரதானமாக இருபோகங்கள் நெற்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது. 2009 இப்பிராந்தியங்களில் பெறப்படும் நெல் விளைச்சலின் மொத்த அறுவடையையும் தெற்கே அனுபவித்திருக்கிறது. மிகவும் குறைந்த விலைக்குப் பகல்கொள்ளையாகத் தெற்கு வியாபாரிகள் அறுவடையை அள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் நிலமை அப்படியிருக்கவில்லை.
வன்னிப் பிராந்தியம் தனியொரு நெற்களஞ்சியமாகவே இயங்கியது. மல்லாவியில், மாங்குளத்தில், ஒட்டுசுட்டானில், சுதந்திரபுரத்தில், புதுக்குடியிருப்பில் பாரிய நெற்களஞ்சியங்கள் இருந்தன. விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் கொள்வனவுசெய்யப்படும் நெல், பொருளாதாரத் தடை காலத்தை பசி, பட்டினியின்றி கடக்கப்போதுமானதாகவிருந்தது.
இப்போதும் யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு மாகாணம் என நெல்விளைச்சல் இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கான, பிரதேசங்களுக்கான களஞ்சியங்கள் இல்லை. பலநோக்கு கூட்டுறவு, கிராமிய சபைகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரக் கட்டமைப்பொன்றை உருவாக்கினால், அதன் ஊடாக இவ்வாறான களஞ்சியங்களை மீளத் திறக்கலாம். அங்கு சேகரிக்கப்படும் தானியங்கள் வடக்கு, கிழக்கினைப் பசிப்போரிலிருந்து காப்பாற்றப் போதுமானதாகவிருக்கும்.
போரின் பின்னர் வடக்கு, கிழக்கு பாகங்களில் வாழும் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதியின் தொகைக்கு அளவேயில்லை. இந்தப் பொருளாதாரப் பேரிடரிலிருந்து தாயகத் தமிழர்களைக் காப்பாற்றவும் புலம்பெயர் தமிழர்களின் நிதியே பெருமளவு பாங்காற்றப்போகிறது. இவ்வாறு தாயத்திற்காக நிதியளிக்கும் புலம்பெயர் தமிழர்கள் இனியும் வாழ்வாதாரத்திற்கான உதவித் திட்டங்களை செய்துகொண்டிருக்காமல், தொழில் உருவாக்கங்களுக்கான நிதியளிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
தாயக மக்கள் எந்தப் பேரிடரையும் தம் சொந்தக் காலில் நின்று எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரப் பலத்தை உருவாக்கக்கூடிய தொழில் முகாந்திரங்களை அமைக்க வேண்டும். இப்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான வசதிவாய்ப்புகள் குறைவாக உள்ளன.
உதாரணத்திற்கு வன்னி நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட பலர் ஆர்வமாக உள்ளபோதிலும், விவசாய நடவடிக்கைகளுக்குரிய நீரைப் பெறுவதில் பெறும் இடர்பாடுகள் உண்டு. குளங்கள் பல்கிப் பெருகி இருந்தாலும், எல்லா குளங்களும் நீர்ப்பாசன வழிமுறைகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே நீர்ப்பாசனத்தை கிணற்றிலிருந்தே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
விவசாயம் செய்ய ஆர்வமுள்ள ஒருவரின் துரதிஸ்டம் என்னவெனில் அவரிடம் கிணறு இருப்பதில்லை. இவ்வாறு ஆர்முள்ளவர்களுக்கு கிணறுகள், நீர் இறைப்பதற்குத் தேவையான உப பொருட்கள் ஆகியவற்றைக் கொடுத்தால், முயற்சியாளர் ஒருவருக்கு தூண்டில் கொடுத்த நிம்மதியைப் பெறலாம். தனியே தேசக் கட்டுமானம் என்பது அரசியல்தளத்தில் மாத்திரம் நிகழ்த்தப்படுவதல்ல. பொருளாதார பலம் தேசக்கட்டுமானத்தின் அரைவாசிப் பங்கை எடுத்துக்கொள்கிறது.
இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதரச் சரிவு தமிழர்களது தேசத்தையே அதிகம் பாதிக்கும். அந்தப் பாதிப்புக்களை முன்னுணர்ந்து, அதற்கேற்ற பொருளாதாரக் கட்டமைப்பொன்றை நோக்கித் தமிழர்கள் விரைவாகவே தம்மை நகர்த்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பகுதியானது என்றுமே எழ முடியாத பொருளாதார அழிவுக்குள் விழ நேரிடும்.