இலங்கைக்கு மேலும் கடினமான தருணங்களும் இருக்கின்றது - சமந்தா பவர்
தற்போதைய ஆபத்தான நேரத்தில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அதேநேரம் மேலும் கடினமான தருணங்களும் உள்ளதாக, அமெரிக்காவின் சர்வதேச நிதியுதவி நிறுவனத்தின் பணிப்பாளர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுடனான பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன், இலங்கையின் நெருக்கடி குறித்து தாம உரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா
நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், நிதி உதவி வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டிய அவர், அமெரிக்கா இந்தியா மற்றும் இலங்கை மக்களின் அனைத்து நண்பர்களுடன் இணைந்து நாட்டிற்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் குறித்து கருத்து தெரிவித்த அவர், பூர்வாங்க ஒப்பந்த நிலையை எட்டியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் கடன் தொல்லைகள் கேள்விக்குறியாக இருப்பதாகவும், அரசாங்கமும் இலங்கையர்களும் எவ்வாறு பொருளாதாரத்தை அணுகுவது என்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் துறையினருடன் பேச்சு
இன்று மாலை இலங்கையின் தனியார் துறையினர், வணிகத் தலைவர்கள் ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும், மேலும் அமெரிக்கா என்ன செய்ய முடியும் என்பது குறித்தும், நெருக்கடியை தனியார் துறை எவ்வாறு நிர்வகிக்கிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் கேட்க உள்ளதாக பவர் கூறியுள்ளார்.
சீர்திருத்தங்களில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர்களிடம்
அறிய உள்ளதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு, சாதாரண மக்களும் ,
முன்னர் சந்தித்திராத சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும் பவர்
கூறியுள்ளார்.