இலங்கைக்கு கிடைக்கவுள்ள உதவி: சமந்தா பவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் உள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கை விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உதவி
இந்த உதவி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு இன்று (10) வருகை தந்த சமந்தா பவர், ஜா அல, ஏகல பிரதேச விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போதே நிதியுதவி தொடர்பான அறிவித்தலை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த புதிய நிதியானது, அடுத்த அறுவடைப் பருவத்தில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கு உதவும்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயம் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் நாட்டின் பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
இதனால் உணவு பொருட்கள்,எரிவாயு என அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் ஏனைய முக்கிய விவசாய உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி உதவும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ,இலங்கையிலுள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உரம் தேவைப்படுவதாகவும் அவர்களில் 53,000 பேருக்கு அவசர நிதியுதவி தேவைப்படுவதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.