“நன்றி இந்தியா” - உணர்ச்சிவசப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கையின் மூத்த சகோதரன் என்ற வகையில் இலங்கை கடினமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தியா எப்போதும் உடன்நின்று ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் உரிய தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.
உயர்ஸ்தானிகருக்கு வழங்கப்பட்ட விருது
இதன்போது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக உரிய தருணத்தில் இந்திய அரசாங்கத்தினாலும் அந்நாட்டு மக்களாலும் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதனைப் புலப்படுத்தும் வகையிலான விருதொன்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை அடுத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உணர்ச்சிவசப்பட்ட உயர்ஸ்தானிகர்
இராஜதந்திரியொருவர் பேசுவதற்கு வார்த்தைகளின்றி இருப்பது புதிது, இருப்பினும் தான் அந்த நிலையிலேயே இருப்பதாகவும் உணர்ச்சிப்பெருக்குடன் தெரிவித்துள்ளார்.
மேலும், கலாநிதி கொஸ்கொட சிறி சுபுதி அனுநாயக்க தேரர், கலாநிதி எம்.விமலசார தேரர், பேராசிரியர் மல்லாவ ஹன்டி ஜகத் ரவீந்திர, கிமார்லி பெர்னாண்டோ, கலாநிதி வின்யா ஆரியரத்ன, நவீன் குணரத்ன, ஏ.பால்ராஜ், நயோமினி வீரசூரிய, மஹேந்திர அமரசூரிய, சுலோச்சன சேகர மற்றும் கே.ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்புகள் குறித்தும், இந்தியாவினால் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றியதுடன் அவற்றுக்காக இலங்கை மக்களின் சார்பில் மனபூர்வமான நன்றியையும் வெளிப்படுத்தினர்.