இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி.. அநுர ஆட்சியைக் கவிழ்க்க சதி : பிரதி அமைச்சரின் விளக்கம்
பொருளாதார வீழ்ச்சி மற்றும் இனவாதம் என்பவற்றை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றலாம் எனச் சிலர் நினைக்கின்றனர். அது வெறும் பகல் கனவு மாத்திரமே என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
எமது அரசைக் குறுக்கு வழியில் கவிழ்க்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது என்றும், மக்களுக்கான சட்டங்கள் ஒருபோதும் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு இடமில்லை..
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மீண்டும் ஒரு வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதிச் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். காலநிலை மாற்றத்தை வைத்தாவது மக்களை வீதிக்கு இறக்க முடியுமா என்றும் அவர்கள் யோசிக்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும், அவசரகாலச் சட்டத்தை எமது அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது கிடையாது.
அத்தியாவசிய சேவையாளர் நாயகம் தனது பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும் ஒரே நோக்கிலேயே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களைப் போன்று அரசியல் பழிவாங்கல் அல்லது அடக்குமுறைகளுக்காக இந்தச் சட்டத்தை அரசு பயன்படுத்தவில்லை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத அரசாக இருந்தால் மாத்திரமே, ஆட்சியை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றது. பொருளாதார வீழ்ச்சிக்கு நாம் இடமளிக்கவில்லை.
எனவே, அரசு கவிழும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அதேபோல், எமக்கு எதிராக இனவாதம் மற்றும் மதவாதத்தைப் பரப்பிப் பிரசாரம் முன்னெடுத்தனர்.
ஆனால், நாட்டில் இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ இடமில்லை என்பதை நாம் நிரூபித்துள்ளோம். இன ஐக்கியமும், நாட்டு மக்களின் ஒற்றுமையுமே எமது முதன்மை நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.