இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீண்டகால பங்காளி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால பங்காளியாக இலங்கை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக நிதியுதவி
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 2022-2025 ஆம் ஆண்டுப்பகுதியில் குறைந்தது 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை உட்பட்ட ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் மோசமடைந்து வரும் உணவு நெருக்கடியைத் தணிக்க செலவிடவுள்ளது.
உணவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நீண்ட கால உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒரு விரிவான திட்டத்தை, ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றின் தாக்கங்களுக்கு எதிராகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
விவசாய உள்ளீடுகள், உணவு உற்பத்தி மற்றும் விநியோகம், சமூகப் பாதுகாப்பு, நீர்ப்பாசனம், நீர்வள முகாமை உள்ளிட்ட துறைகளில் தீர்வுகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
இதனை தவிர போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் பிற நடவடிக்கைகளிலும் வங்கி தொடர்ந்து முதலீடு செய்யும்.
பொருளாதார நெருக்கடி
ஆசியாவின் பல ஏழைக் குடும்பங்களை பசியிலும், வறுமையிலும் ஆழ்த்தும் நெருக்கடிக்கு இது சரியான நேரத்தில் மற்றும் அவசரமாகத் தேவைப்படும் பதிலாகும் என்று வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா, 55 வது ஆண்டு கூட்டத்தில் நேற்று கூறியுள்ளார்.
அதேவேளையில், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு, தமது ஆதரவு இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களின்
விநியோகத்தை சீர்குலைத்துள்ளது, காலநிலை மாற்ற பாதிப்புகள், தொற்றுநோய்
தொடர்பான விநியோக தாக்கங்களால் ஏற்கனவே உலக பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது
என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.