ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் நாணயமாக மாறியுள்ள இலங்கை ரூபாய்
இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சிறந்த நிலையில் இருந்த இலங்கை ரூபாய், தற்போது ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் நாணயமாக மாறியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் வட்டி விகிதங்களைக் குறைத்தமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்தியமையினால் டொலருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக புளூம்பெர்க் சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெறுமதி வீழ்ச்சி
தொடர்ந்து 14வது நாளாக நேற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், இம்மாதத்தில் மட்டும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கிட்டத்தட்ட 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வருட இறுதிக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் மேலும் வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வட்டி விகித மாற்றங்கள்
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், இலங்கையின் வர்த்தக சமநிலை மேலும் எதிர்மறையாக மாறும் எனவும், பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைவதால், எதிர்காலத்தில் மேலும் வட்டி விகித மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வருட இறுதிக்குள், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 8 வீதத்தால், அதாவது 355 ரூபாய் வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.