1996 உலகக்கிண்ண வெற்றியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை முதலீடு
1996 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்களுடன் இணைந்து இந்திய முதலீட்டில் கட்டப்படவுள்ள 42 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு நேற்றையதினம்(12) அடிக்கல் நாட்டப்பட்டது.
பெலவத்தையில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள காணியில், 240 வீட்டுத் தொகுதிகள் இடம்பெறும், ஒவ்வொரு தளத்திற்கும், இலங்கை அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பின்னர்
1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க(Arjuna Ranatunga) இந்த கட்டடத்துக்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளார்.
1996ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga), உலகக்கிண்ண அணியில் பங்கேற்ற 14 பேருக்கும் தலா பத்து பேர்ச்சஸ் காணியை வழங்கினார்.
இந்தநிலையில், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த இடத்தில் 42 மாடி அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணிக்க ஒரு இந்திய முதலீட்டாளரை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் 30 முதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வரமுடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 1996 உலகக்கிண்ண அணி உறுப்பினர்களான அரவிந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, ரொமேஸ் களுவிதாரண மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |