இலங்கையில் பெண் பொலிஸாரிடம் உயர் அதிகாரி நடந்துகொள்ளும் விதம்! காணொளியினால் சர்ச்சை (VIDEO)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது களுத்துறையில் இருந்து காலிமுகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை கொரகாபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.
குறித்த பெண்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு விளைவித்த நிலையில்,குறித்த பெண்களை கைது செய்ய பல பெண் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது பெண் பொலிஸ் அதிகாரிகளிடம் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது.
உயர் பொலிஸ் அதிகாரியொருவர் பெண் பொலிஸ் அதிகாரியொருவரை கழுத்தினை பிடித்து தள்ளும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டின் மூலம் இலங்கையின் பொலிஸ்துறை எந்தளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும், அதிகாரம் உள்ளவர்களின் தோல்வியினாலும், மெத்தனப் போக்கினாலும் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்கின்றதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.