வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்தியா செய்யும் உதவிகள் மகத்தானவை - ஆளுநர் வேதநாயகன்
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விசேட நிகழ்வும், ஆளுநரின் உரையும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளின் பின்னர் அதிதிகள் ஆலய வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் குறிப்பிடுகையில், "வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாவிகளும் பெருமளவில் வருகைதரும் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயம் இங்கு அமைந்துள்ளது.
வரலாற்றுக் குறிப்புகள்
இந்தியாவிலிருந்து வந்த மருதப்புரவல்லி இளவரசி, இங்குள்ள புனித தீர்த்தத்தில் (கீரிமலை ஊற்று) நீராடி தன் குறை நீங்கி, மாவிட்டபுரம் ஆலயத்தை எழுப்பி வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இத்தகைய மிக நீண்ட பண்டைய வரலாற்றையும் புகழ்பெற்ற புனித தீர்த்தத்தையும் கொண்ட இந்த ஆலயத்துக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் வந்திருந்த போது வருகை தந்திருந்தார்.
இந்திய அரசு வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஏனைய வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்ட இந்திய வீட்டு வசதித் திட்டத்தை நாம் எப்போதும் நன்றியோடு நினைவுகூர்வோம்.
இதன்மூலம் இன்று பல குடும்பங்கள் நல்ல உறுதியான வீடுகளில் பாதுகாப்பாக வாழ முடிகின்றன. நான் அந்தக் காலகட்டத்தில் முல்லைத்தீவில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதால் இதனை நேரில் கண்டு நன்கு அறிவேன். இந்திய அரசின் இந்த மகத்தான பங்களிப்பை வடபகுதி மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டார்.






ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri